WEB LINK

Friday, September 7, 2012

அறிவியல் வானவியல்-சனி (SATURN)-பதிவு-010

சூரிய  குடும்பம்-8-சனி-(SATURN)


 சனி மற்றும் அதன் துணைக் கோள்கள்
சென்ற பதிவில் தரை மேற்பரப்பைக் கொண்டிராத ஆனால் பருமனில் மிகப் பெரிய வாயுக்கோள்களில் முதலாவதான வியாழன் (JUPITAR) பற்றிய தகவல்களைப் பார்த்தோம்.

இப்பதிவினில் சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகப் பெரிய கோளாக விளங்கும் அதே நேரம் மிகக் குறைந்த அடர்த்தியைக் கொண்டிருப்பதுமான சனிக் கிரகம் பற்றி ஆராய்வோம். சூரியனிடம் இருந்து ஆறாவது இடத்தில் சராசரியாக 9.537 AU தூரத்தில் அமைந்துள்ள சனிக்கிரகம் ரோமானியர்களின் விவாசாயத்திற்கு உதவும் மிக முக்கிய கடவுளின் பெயரான Saturn எனும் பெயரைக் கொண்டுள்ளது. சனிக் கிரகத்தின் ஆரை பூமியை விட 9 மடங்கு அதிகம் என்ற போதும் அதன் அடர்த்தி பூமியை விட 8 மடங்கு குறைவாகும். அடர்த்தி குறைவு காரணமாக சனிக்கிரகத்தை தண்ணீரில் இட்டால் அது மிதக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும் சனிக்கிரகம் மிகப் பெரிய கனவளவைக் கொண்டிருப்பதால் இதன் நிறை பூமியை விட 95 மடங்கு அதிகம்.

வியாழனைப் போன்றே சனியும் தனது அச்சில் மிக வேகமாக சராசரியாக 10km/s வேகத்தில் சுற்றுவதால் அதன் துருவப் பகுதிகள் தட்டையாக உள்ளன. மேலும் வியாழனை ஒத்த வாயுக் கோளான சனியின் உள்ளகம் இரும்பு,நிக்கல் ஆகிய கணிமங்களாலும், பனிக்கட்டி மற்றும் சிலிக்கன் ஆக்ஸிஜனால் ஆன பாறைகளினாலும் ஆனது. இதன் மேற்பரப்பில் பெரும்பாலும் ஐதரசனும் ஹீலியமும் நிரம்பிக் காணப்படுகின்றன. மேலும் சனியில் வியாழனை விட மிக வேகமாக (1800 Km/h) காற்று வீசி வருகின்றது. சனியின் உள்ளகத்தின் மேலே அதைச் சுற்றிதடிமனான உலோக மற்றும் ஐதரசன் அடுக்கும் அதன் மேல் வளியடுக்கும் காணப்படுகின்றது.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பார்ப்போரைக் கவரும் அழகும் அமைப்புமான வளையங்களைக் கொண்டுள்ள கிரகமாக சனி விளங்குகின்றது. சனியின் மிக முக்கிய அம்சமாக அதன் வளையங்கள் விளங்குகின்றன எனலாம். விண்ணில் காணப்படும் தூசு துகள்களாலும், பனிக்கட்டிகளாலும், சிறிய பாறைகளினாலும் ஆன இதன் வளையங்கள் 6630 Km இலிருந்து 120 700 Km வரை நீண்டு காணப்பட்ட போதும் இவற்றின் தடிப்பம் மிக மிகக் குறைவாக அதாவது வெறும் 20 மீற்றர் மட்டுமே உள்ளது.

  சனியின் வளையங்கள்
சனிக் கிரகத்தைச் சுற்றி இதுவரை 62 துணைக் கோள்கள் அடையாளங் காணப் பட்டுள்ளன. இவற்றில் 53 நிலவுகள் உத்தியோக பூர்வமாகப் பெயரிடப் பட்டுள்ளன. இவற்றைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிநிலவுகளும் (Moonlets) சனியைச் சுற்றி வலம் வருகின்றன. பூமியை ஒத்த வளி மண்டல மற்றும் சூழல் இயல்புகள் உடைய சனியின் மிகப் பெரிய துணைக் கோளான டைட்டன் புதன் மற்றும் புளூட்டோ கிரகங்களை விடப் பெரியது என்பதுடன் சூரிய மண்டலத்தில் வியாழனின் கனிமீட்டுக்கு அடுத்து 2வது மிகப் பெரிய துனைக் கோள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனியின் வளையங்கள் மிக மெல்லியதாக இருப்பதாலும் சனி பூமியைப் போன்றே தனதச்சில் சாய்ந்திருப்பதாலும் ஒவ்வொரு 13 அல்லது 16 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட மிகச் சிறிய நேரத்துக்கு இவ்வளையங்கள் பார்வைக்குத் தென்படுவதில்லை. சனியின் வளையக் குறுக்கீடு என அழைக்கப் படும் இந்நிகழ்வு இறுதியாக 1995 மற்றும் 1996 ஆம் வருடங்களில் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு மும்முறை நிகழ்ந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும் பூமியிலிருந்து பார்க்கும் போது இதன் வளையங்கள் யாவும் ஒரே நிறத்தில் தென்பட்ட போதும் இது உண்மையல்ல என கஸ்ஸினி செய்மதி அனுப்பிய புகைப்படங்கள் தெளியப்படுத்தின.

1997
ம் ஆண்டு ஆக்டோபரில் நாசா மற்றும் ஐரோப்பிய விண்ணாய்வு நிறுவனமான ஈசா என்பவை இணைந்து சனிக் கிரகத்தை நோக்கி கஸ்ஸினி செய்மதியைச் செலுத்தின. இச்செய்மதி 7 வருடங்கள் பயணித்து 2004 ஜூனில் சனியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. மேலும் 2005 ஜனவரியில் சனியின் மிகப் பெரிய துணைக் கோளான டைட்டனில் கஸ்ஸினி செய்மதியிலிருந்து ஹுய்ஜென்ஸ் (Huygens) ஆய்வு கருவி வெற்றிகரமாக இறக்கப்பட்டது. இக்கருவியின் மிக நுண்ணிய கமெராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே சனியின் வளையங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நிறங்களையும் பிரகாசத்தையும் உடையவை என நிரூபித்தன. 

மேலும் இப்புகைப்படங்கள் இவ்வளையத் தொகுதிகள் யாவும் ஆயிரக்கணக்கான சிறிய தனித்தனி வளையங்களால் ஆனவை என்றும் எடுத்துக் காட்டின. சனியின் வளையங்களின் தோற்றம் பற்றிக் கருதும் போது இரு கோட்பாடுகள் வானியலாளர் களால் முன் வைக்கப் படுகின்றன. சனியின் சிறிய நிலவுகள் அல்லது சூரியனை வலம் வரும் வால் வெள்ளிகள் என்பவை மிகச்சிறிய துண்டுகளாக உடைந்து சனியின் வளையங்கள் தோன்றின என்பது ஒரு கோட்பாடு. சனிக்கிரகம் தோன்றும் போது உருவான வான் புகையுரு அல்லது தூசுகளின் எஞ்சிய பாகங்களே இவ் வளையங்களாகின என்பது இன்னொரு கோட்பாடு. தற்போது இவ்வளையங்களின் வயது 4 பில்லியன் வருடங்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இனி சனிக்கிரகம் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.
தன்னைத்தானே ஒருமுறை சுற்ற எடுக்கும் நேரம்-10 மணி 39 நிமிடம் 25 செக்கன்
2.
சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம்-29 வருடம் 167 தினம் 6.7 மணி
3.
சுற்றுப் பாதையில் வலம் வரும் வேகம் - 9.6724 Km/s
4.
தன்னைத் தானே அச்சில் சுழலும் வேகம் - 9.87 km/s
5.
சூரியனிலிருந்து சராசரித் தூரம் - 1 426 725 400 Km or 9.537 AU
6.
விட்டம் - 120 536 Km
7.
புற மேற்பரப்பளவு - (4.38 * 10 இன் வலு 10) Km2
8.
நிறை - (5.688 * 10 இன் வலு 26) Kg
9.
சராசரி அடர்த்தி - 0.69 g/cm3
10.
மேற்பரப்பு ஈர்ப்பு சக்தி - 8.96 m/s2
11.
அச்சின் சாய்வு - 26.73 பாகை
12.
தப்பு வேகம் - 35.49 Km/s
13.
மேற்பரப்பு வெப்ப நிலை - குறை - 82K, நடு - 143k
14.
துணைக் கோள்களின் எண்ணிக்கை - 62
15..
வளி மண்டல அழுத்தம் -
140 kPa

வளிமண்டலத்தில் உள்ள மூலகங்களின் சதவீதம் -

1.
ஐதரசன் - 93%
2.
ஹீலியம் - 5%
3.
மீத்தேன் - 0.2%
4.
நீர் ஆவி - 0.1%
5.
அமோனியா - 0.01%
6.
ஈத்தேன் - 0.0005%
7.
பாஸ்பேன் -
0.0001%
வியாழக் கிரகம் பூமியை விட 318 மடங்கு நிறையையும் சனி பூமியை விட 95 மடங்கு நிறையையும் கொண்டுள்ளன. மேலும் வியாழன் சனியை விட 20% பெரியதாகும். இவ்விரு கிரகங்களும் இணைந்து சூரிய மண்டலத்தின் 92% வீதமான நிறையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சனியின் துணைக்கோள்களில் பெரும்பாலானவற்றுக்கு கிரேக்க புராணக் கதைகளில் வரும் கடவுளர்களின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இவற்றில் டைட்டன் மற்றும் என்கெலடுஸ் ஆகிய துணைக் கோள்களில் உயிர் வாழ்க்கைக்கு அறிகுறியான தன்மைகள் நிலவுகின்றது. சூரிய குடும்பத்திலேயே டைட்டன் துணைக்கோள் மட்டுமே மிகப் பரந்த வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதுடன் சிக்கலான சேதன இரசாயனம் நிகழும் ஐதரோ காபன் ஏரிகளையும் உடையது.

  சனியும் பூமியும் ஒப்பீடு
மேலும் என்கெலடுஸ் துணைக் கோள் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான அடித்தளத்தை கொண்டிருப்பதுடன் உப்பு பனிக்கட்டிகளாலான கடல் போன்ற அமைப்பையும் இது கொண்டுள்ளது. இதுவரை சனிக்கிரகத்தை ஆராய்ந்த துணைக் கோள்களைப் பற்றிப் பார்த்தால் ஆரம்பத்தில் நாசாவின் பயனீர் 11 விண்கலமும் அதன் பின்னர் வொயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்களும் இறுதியாக 2004 இல் கஸ்ஸினி விண்கலமும் செலுத்தப் பட்டுள்ளன. இவற்றில் கஸ்ஸினி செய்மதி மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.

இதன் மிக முக்கிய பணி 2008 இல் முடிவடைந்த போது இது சனியைச் சுற்றி 74 தடவை வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இச்செய்மதியின் ஆய்வுப்பணி 2010 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு இறுதியாக 2017 வரை இக்காலம் விரிவு படுத்தப்பட்டது. கஸ்ஸினி விண்கலம் சனியின் வளையங்கள் அதன் துணைக் கிரகங்கள் பற்றிப் பல தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது மட்டுமல்லாமல் சனியின் 8 புதிய துணைக் கோள்களையும் கண்டு பிடித்திருந்தது. தற்போது இதன் நோக்கம் சனியின் பருவ காலங்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து அனுப்புவதாகும்.

கஸ்ஸினி செய்மதி
இதுவரை நட்சத்திரப் பயணங்கள் சூரிய குடும்பம் தொடரில் பூமியிலிருந்து ஆரம்பித்து புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன்,சனிவரை ஆறு முக்கிய கிரகங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். அடுத்த தொடரில் சூரியனிடமிருந்து மிகத் தொலைவிலுள்ள குளிர்ந்த கிரகங்களான யுரேனஸ்,நெப்டியூன் ஆகிய கிரகங்களைப் பற்றியும் கிரகம் என்று கருத முடியாத ஆனால் சூரியனைச் சுற்றி மிகத்தூரத்தில் வலம் வரும் புளூட்டோ பற்றியும் ஆன தகவல்களை எதிர் பாருங்கள்.
====================================
மீண்டும் சந்திப்போம்... யுரேனஸ்,நெப்டியூன் கிரகப் பதிவினில்...
 
அன்புடன்...


அண்ட்.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet 

No comments:

Post a Comment