WEB LINK

Saturday, September 8, 2012

அறிவியல்-வானியல்-பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி - II


பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி - 2 (பெருவெடிப்பின் ஒரு செக்கனுக்கு பின்)

முந்தைய தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அலசுகையில் பிக் பாங் எனும் பெரு வெடிப்பு நிகழ்ந்த முதலாவது செக்கனில் நிகழ்ந்த மாற்றங்களை கருக்கள் மற்றும் துணிக்கை ரீதியாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டிருந் தோம். இந்த அடிப்படையில் இறுதியாக பெரு வெடிப்பின் முதல் செக்கனின் பின் குவார்க் குளுவோன் சக்தி திடர் குளுமையடைவதன் மூலம் கருவின் உள்ளே உள்ள புரோட்டன் மற்றும் நியூட்ரோன் துணிக்கைகளை உள்ளடக்கிய ஹெட்ரோன் கூட்டு  உருவாகி பிரபஞ்ச வெளியில் நியூட்ரினோக்கள் சுதந்திரமாக நடமாட வழி ஏற்பட்டது.
இதை அடுத்து பெரு வெடிப்பின் 1-10 செக்கனுக்கு இடையில் லெப்டோன் இப்போ நிகழ்கின்றது. பிரபஞ்சத்தில் அதிக பட்சமாக காணப்படும் ஹெட்ரோன்களும், இதன்  எதிர்த்துணிக்கையான ஆண்டிஹெட்ரோன் களும் தமக்கிடையே தாக்கமுற்று ஒன்றை இன்னொன்று அழித்த பின்னர் லெப்டோன்கள் உருவாகின்றன. இவை பிரபஞ்சத்தின் அதிக பட்ச நிறையை தமதாக்கி விடும். அடுத்த கட்டமாக லெப்டோன்களும் அண்டிலெப்டோன்களும் தாக்கமுற்று ஒன்றையொன்று அழித்த பின் மிகச்சிறிய லெப்டோன்களே எஞ்சி நிற்கும்.

இக்கட்டத்தின் பின்னர் அதாவது 10 செக்கனுக்கும் 380 000 வருடங்களுக் கும் இடைப்பட்ட பகுதியிலேயே மிக நீண்ட தாக்கம் நடைபெறுகிறது. இக் காலப்பகுதி போட்டோன் இப்போ எனப்படுகின்றது. அதாவது துணிக்கை என்று கருதமுடியாத எனினும் துணிக்கையின் இயல்பும்,மின்காந்த அலைகளின் இயல்பும் சேர்ந்த போட்டோன் எனும் நிறையற்ற ஒளிக் கற்றை போன்ற பொருள் அணுக்கருவுடனும் புரோட்டன் மற்றும் எலெக்ட்ரோனுடனும் தாக்கமுற்று பிரபஞ்ச உற்பத்தியை நிகழ்த்து கின்றன.

முதல் 10 செக்கனுக்கு பின்னர் நிகழும் போட்டோன் இப்போவின் போதே பிரபஞ்சத்தின் வெப்ப நிலை நன்கு வீழ்ச்சியடைந்து நியூக்ளி எனப்படும் அணுக்கருக்கள் உற்பத்தியாகின்றன.  பெருவெடிப்பின் 3-20 இடைப்பட்ட நிமிடங்களில் நிகழும் இந்த கருத்தாக்கம், பிரபஞ்ச வெளியில் உள்ள சடப்பொருளின் அடர்த்தி,வெப்பநிலை என்பன மேலும் வீழ்ச்சியடையும் வரை நிகழும். இது 17 நிமிடங்களில் நிறைவுறும். அதன் பின் பிரபஞ்ச வெளியில் ஹீலியம்4 அணுக்களும் அதை விட 3 மடங்கு அதிகமாக ஐதரசன் அணுக்களுமே அதிக பட்சமாக நிரம்பியிருக்கும்.



பிரபஞ்ச தோற்றத்தின் காலகட்டங்கள்.
பெருவெடிப்பின் 70 000 வருடங்களுக்குப் பின்னர் அணுக் கருக்களின் அடர்த்தியும், போட்டோன் கதிரியக்கமும் சமப்படும். இந்நிலையில் ஈர்ப்பு விசை மற்றும் சடப்பொருளின் அழுத்தம் என்பவற்றின் போட்டி காரணமாக நிகழும் மிகச்சிறிய அணுக் கட்டமைப்புக்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும். இது ஜீன்ஸ் லெந்த் எனப்படுகின்றது.

அடுத்ததாக பெருவெடிப்பின் 377 000 வருடங்களுக்கு பின்னர் பிரபஞ்சத் தின் அடர்த்தி வீழ்ச்சியடைவதால் ஐதரசன் அணுக்களும் ஹீலியம் அணுக்களும் உருவாகின்றன. மேலும் பிரபஞ்சம் குளிர்வடைந்து எலெக்ரோன்கள் யாவும் கருவுடன் இணைந்து நடுநிலையான அணுக்கள் உண்டாகின்றன.ஆரம்பத்தில் ஐதரசன்,மற்றும் ஹீலியம்4 அணுக்கள் உண்டாக எடுத்த நேரத்தை விட இது வேகமாக நிகழ்வதுடன் மறு இணைப்பு அல்லது ரீகம்பினேசன் எனவும் இது அழைக்கப்படு கின்றது.

அணுக் கருக்கள் நடு நிலையாக்கப் பட்டதால் போட்டோன்கள் சுதந்திரமாக வெளியில் பயணஞ் செய்யும் வாய்ப்பும் உருவாகின்றது. இதனால் சடப்பொருளுக்கும் அலைகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி பிரபஞ்சம் வெளி,ஊடகம்,பொருள் மற்றும் அலை என்பன இணைந்த ஒன்றாக மாற்றமடைகின்றது.

இன்னும் எஞ்சியிருக்கும் கட்டங்களாக, பிரபஞ்சத்தின் இருண்ட யுகம், கட்டமைப்பின் தோற்றம், மறு அயனாக்கம், நட்சத்திரங்களின் தோற்றம், அண்டங்களின் தோற்றம்,அண்டங்களின் கூட்டு, கிளஷ்டர்ஸ், சுப்பர் கிளஷ்டர்ஸ் என்பவற்றின் தோற்றம்,சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் 13.7 பில்லியன் வருடம் கழித்து இன்றைய நிலை என்பன பற்றி அடுத்த தொடரில் ஆராயப்படும்.


====================================
மீண்டும் சந்திப்போம்... 
 
அன்புடன்...
AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet 

No comments:

Post a Comment