WEB LINK

Friday, September 7, 2012

அறிவியல் வானியல்-வெள்ளி(VEENUS)-பதிவு-007




  சூரியனை கடக்கும் வெள்ளிகிரகம்
105 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் பேரனுக்கோ, பேத்திக்கோ,அல்லது கொள்ளுபேரர்களுக்கோ மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு ஜுன் 6ந் தேதி  உங்களுக்கு கிடைத்தது, வெள்ளி இடைமறிப்பு என்னும் நிகழ்வு:

நீங்கள் தினசரி வானத்தை பார்க்கீர்களா? என்றால் இல்லை என்ற பதில்தான் அதிகமாக வரும். தினசரி வானத்தை பார்க்க வானத்தில் என்னதான் இருக்கிறது?. காலை அற்புதமான சூரிய உதயத்தில் துவங்கி மாலை சூரிய அஸ்தமனம் என வானம் காட்டும் வர்ண ஜாலங்கள், இரவுநேர வானத்தில் வைரத்தை கொட்டிவைத்தது போன்ற கண் சிமிட்டும் நட்சதிரங்கள், நம் சூரியன் உள்ளடங்கிய பால்வெளி மண்டலம், நிலவின் மாறிவரும் தோற்றம், அடிவானத்தில் தெரியும் வெள்ளி கிரகம், அவ்வப்போது பூமிக்கு அருகில் வந்து செல்லும் வியாழன், சனி, செவ்வாய் கிரகங்கள், என சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி அற்புதம் காட்டும் வானத்தில் வரும் ஜூன் 6 வெள்ளி கிரகம் சூரியனை கடந்து செல்கிற இடைநகர்வு நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு குறித்து மதுரை கலிலியோ அறிவியல் மையத்தின் அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர் சத்தியமாணிக்கம் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக அளித்த பிரத்யோக நேர்காணல் இது.
கலிலியோ செயல்பாட்டாளர் சத்தியமாணிக்கம் .
ஜூன்- 6ல் நிகழவிருக்கும் வானியல் அற்புதம் குறித்து சொல்லுங்களேன் !!!

ஜீன் - 6ஆம் நாள் காலை நமது தமிழகத்தில் 5.22.மணி முதல் காலை10.22வரை வானில் நமது சூரியனைக் கடந்து வெள்ளிக் கோள் நகர்ந்து செல்வதை நாம் பார்க்க முடியும். இது அபூர்வ நிகழ்வு நமது திரைப்படங்களில் சூரிய உதயத்தின்போது சூரியனை கடந்து பறவைகள் செல்வதைப்போல காட்டுவர்களே அதைப் போல , பூமியின் சம அளவு உள்ள வெள்ளிக்கோள் மிக தொலைவில் இருப்பதால் நமக்கு ஒரு சிட்டுக் குருவியைப் போல தெரியும் அல்லவா, அந்த அளவில் சூரியனில் வெள்ளிக் கோள் கடந்து செல்வதை பார்க்கலாம் , அது மட்டுமல்ல சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்கு தெரியும் அதையும் அன்றைய தினம் பார்க்க முடியும். நாம் வாழும் காலத்தில் வானில் நடக்கும் இநத் அற்புதத்தை கண்டு மகிழ்வோம்.


கோள்களின் இடைநகர்வு என்றால் என்ன?
நமது சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் நாம் மூன்றாம் இடத்தில் உள்ளோம். சூரியனின் பக்கத்தில் முதலில் இருப்பது புதன், அடுத்து வெள்ளி , நமக்கு துணைக் கோள் சந்திரன். இந்த கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றி வருகின்றது என்பதை அறிவோம். அப்படி வரும் போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் போது சூரியனை சந்திரன் மறைக்கும் இதை சூரிய கிரகணம் என்கின்றோம். 

இதே போல சந்திரனுக்கும் , சூரியனுக்கும் இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் வந்தால் அதை சந்திர கிரகணம் என்கின்றோம், இந்த கோள்களின் பயணத்தால் மற்ற வான் பொருள்களை இடை மறிப்பு செய்வதை கோள்களின் இடை நகர்வு என்கின்றோம், ஏற்கனவே நாம் முதலில் கூறியதைப் போல நாம் மூன்றாம் கோள் . நமக்கு உட்கோள்களாக உள்ள புதன், வெள்ளி, சந்திரன் கோள்கனிள் இடைநகர்வை மட்டுமே நம்மால் காண முடியும். இது கோள்கள் நடத்தும் நிழல் விளையாட்டு என்று கூடச் சொல்லலாம்.
 
வெள்ளி கிரகத்தின் இடைநகர்வு இதற்கு முன்னால் எப்போது நடந்துள்ளது. இனி நடக்குமா?


முதல் முதலாக வெள்ளி இடை நகர்வை 1631ஆம் ஆண்டுதான் கண்டறிந்துள்ளார்கள் அதன் பிறகு 1639,1761,1769,1874,1882,2004 என ஏழு முறை நடந்துள்ளது, இனி 2012 ஜீன் 6ம் நாள் காண முடியும், அடுத்து நாம் வெள்ளி இடை நகர்வை 2117ஆம் ஆண்டுதான் காண முடியும் அதற்கு 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது வாழும் மனிதர்களில் பலருக்கும் சாத்தியமில்லை.

வெள்ளி இடைநகர்வு நிகழும் நேரம்.

வெள்வி இடைநகர்வை வெறும் கண்களால் பார்க்கலாமா? 

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்.ஆனால் சூரிய கிரகணத்தையோ , வெள்ளி இடை நகர்வையோ நாம்வெறும் கண்ணால் பார்க்க கூடாது. அதிக வெப்பக் கதிர்கள் கிரகணத்தின் போது நம்மை நோக்கி வருவதால் நமது கண்கள் உடனடியாக பாதிக்கக் கூடும். எனவே பாதுகாப்பாக பார்க்க எளிமையான வழிகள் உண்டு. நாம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளியை ஒரு திரையில் அடிக்கச் செய்து அதில் இந்த வெள்ளி நகர்வை பார்க்கலாம். தொலை நோக்கி இருந்தால் அதன் மூலம் பிம்பத்தைப் பிடித்து பார்க்கலாம், ஊசித் துளைக் கேமராவை உருவாக்கி பார்க்கலாம், பாதுகாப்பான சூரிய வடிகட்டிக் கண்ணாடிகளை வாங்கிப் பார்க்கலாம், வெல்டிங் கண்ணாடி எண் 14லைப் பயன்படுத்தலாம். இந்த முறைகளைத் தவிர வேறு வழிகளில் நாம் வெள்ளி நகர்வை பார்க்கக்கூடாது. அது நல்லதல்ல.
-------------------------------------------------------
சூரிய குடும்பம் -5- (வெள்ளி -Veenus)



இதுவரை சூரிய குடும்பத்தில் சூரியன்,பூமியின் துணைக்கோள் சந்திரன் மற்றும் தரை மேற்பரப்பை உடைய கிரகங்களான பூமி, புதன் ஆகிய அங்கத்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தொடரில் வானில் சந்திரனுக்கு அடுத்து பிரகாசமாக அதிகாலை மற்றும் அந்தி மாலை ஆகிய இருவேளைகளிலும் ஒரு நட்சத்திரம்போல் தென்படும் வீனஸ் எனப்படும் வெள்ளியைப் பற்றி பார்ப்போம். பொதுப்படையாக வீனஸ் என்பது ரோமானியர்களின் அன்பு,காதல் மற்றும் அழகுக்கான பெண்தெய்வத்தின் பெயராகும்.

 -
ஹபிள் தொலைக் காட்டியால் படம் பிடிக்கப் பட்டுள்ள வெள்ளியின் ஒரு பகுதி

வெள்ளிக் கிரகத்தின் இன்னொரு பெயரான சுக்கிரன் என்பது இந்து சமயத்தில் நவக்கிரகங்களில் அதிர்ஷ்டத்துக்கு அதிபதியாகவும் அசுர குருவாகவும் விளங்கும் கோள் அல்லது தேவராகும். இன்னொரு விதத்தில் வெள்ளியில் காணப்படும் வரண்ட பள்ளத்தாக்குகளாலும் பல உயிருள்ள எரிமலைகளாலும் அது நரகம் அல்லது அசுரர்களின் நிலம் என ஒரு சாராரால் அழைக்கப்படுகின்றது.

வெள்ளி பருமனிலும் இன்னும் சில அம்சங்களிலும் பூமிக்கு சராசரியாக சமனாக இருப்பதால் பூமியின் தங்கைக் கிரகம் என அழைக்கப்படுகின்றது. சூரியனிலிருந்து புதனுக்கு அடுத்து 2வது இடத்தில் இது அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தின் பெரும்பாலான கிரகங்களைப் போலன்றி வெள்ளி வலமிருந்து இடமாகவே எதிர்ப் பக்கமாக தனது அச்சில் சுழலுகின்றது. வெள்ளிக் கிரகமே தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வந்து செல்லும் கிரகமாகும். இது சூரியனிடமிருந்து சராசரியாக 108 200 000 Km தூரத்தில் சுற்றி வருகிறது.


வெள்ளி தனது அச்சில் மிக மெதுவாக சுற்றி வரும் கிரகமாகும். இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 224.7 புவி நாட்களையும் தனது அச்சில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர 243 நாட்களையும் எடுக்கிறது. வெள்ளியின் எடை பூமியின் எடையின் 4/5 பங்காகும். அதன் ஈர்ப்பு விசை புவியை விட சிறிது குறைவு. பூமியில் 100 பவுண்ட் எடையுடைய ஒரு பொருள் வெள்ளியில் 91 பவுண்டுகளாகும். மேலும் வெள்ளியின் அடர்த்தியும் புவியை விட சிறிதே குறைவாகும். வெள்ளியின் வளி மண்டலத்தின் தன்மை காரணமாக அது சூரிய குடும்பத்தில் வேறு எந்த கிரகத்தையும் விட மிக அதிக வெப்பமுள்ள கிரகமாக விளங்குகின்றது. வெள்ளியின் மேற்பரப்பு வளி மண்டல அடுக்கின் வெப்ப நிலை 55 F(13 C) ஆகவும் தரை மேற்பரப்பின் வெப்பநிலை 870 F(465 C) ஆகவும் காணப்படுகின்றது. இக்கிரகத்தின் அதீத வெப்பநிலை காரணமாக இக்கிரகத்தின் உள்ளே தண்ணீர் காணப்படின் அது முழுதும் ஆவியாகி விடும் சூழ்நிலையே நிலவுகின்றது. இதன் காரணமாக பூமியில் காணப்படும் உயிரினங்கள் இங்கே வாழ முடியாது. எனினும் வேறு ஏதும் உயிர்கள் இங்கு காணப்படுகிறதா என விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை. 
இனி வெள்ளி பற்றிய சுருக்கமான இயல்புகளைப் பார்ப்போம்.

1.
சூரியனிலிருந்து சராசரித் தூரம் - 0.72333199 AU
2.
சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 224.701 நாட்கள்
3.
தன்னைத் தானே தனதச்சில் ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 243.0187 நாட்கள்
4.
பூமி சார்பாக சுற்றுக் காலம் - 583.92 நாட்கள்
5.
சராசரி சுற்று வேகம் - 35.0214 Km/s
6.
துணைக் கோள் - இல்லை
7.
மையத்தினூடாக விட்டம் - 12103.6 Km
8.
மேற்பரப்பளவு - (4.60 * 10 இன் வலு 8) Km2
9.
திணிவு - (4.869 * 10 இன் வலு 24) Kg
10.
சராசரி அடர்த்தி - 5.24 g/cm3
11.
மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 8.87 m/s2
12
அச்சின் சாய்வு - 2.64 பாகை
13.
தப்பு வேகம் - 10.36 Km/s
14.
மேற்பரப்பு வெப்ப நிலை - தாழ்வு 228K இடை 737 K உயர் 773 K
15.
வளியமுக்கம் -
9321.9 Kpa

வெள்ளியின் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களின் வீதங்கள் -  

1.
கார்பனீரொட்சைட்டு - 96%
2.
நைட்ரஜன் - 3%
3.
சல்பர் ஒக்ஸைட் - 0.015%
4.
நீராவி - 0.002%
5.
ஹீலியம் - 0.0012%
6.
நியோன் -
0.0007%

வெள்ளிக் கிரகத்தின் வயது புவியின் வயதுக்கு அண்ணளவிற் சமனாகும். இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்திலேயே சூரியனிடமிருந்து தோன்றின என்றும் ஒரு சிலரால் கருதப்படுகின்றது. வெள்ளியின் வளி மண்டலத்தைப் பார்த்தால் மிக அதிகளவாக காபனீரொட்சைட்டு (96%) காணப்படுகின்றது. இதனால் சூரிய குடும்பத்திலேயே மிகப் பாரமான வளி மண்டலத்தையுடைய கிரகமாக வெள்ளி விளங்குகின்றது. பூமியைப் போலவே வெள்ளியிலும் பச்சை வீட்டு விளைவு எனும் தாக்கம் நிகழ்கின்றது. ஆனால் இத்தாக்கம் தாவரங்களில் அல்லாது வளி மண்டலத்தில் நிகழ்கிறது. அதாவது காபனீரொட்சைட்டும், சல்பூரிக் அசிட்டும் இணைந்து சூரிய ஒளியை சிறைப் பிடிப்பதுடன் அதை வெளியேறாமலும் செய்து விடுகின்றன. இதனாலேயே வெள்ளியின் சுற்றாடல் மிக வெப்பமாகக் காணப்படுகின்றது.

மேலும் வெள்ளியின் வளியமுக்கமும் பூமியை விட 90 மடங்கு அதிகம் (9321 Kpa) என்பதுடன் வெள்ளியின் பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கிலிருந்து மேற்காக 362 Km/h வேகத்தில் தொடர்ச்சியாகக் காற்று வீசி வருகின்றது.

வெள்ளியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியைப் போலவே வெள்ளியிலும் மலைகள், மைதானங்கள், பள்ளத்தாக்குகள், மற்றும் சமவெளிகள் என்பன காணப்படுகின்றன. தரை மேற்பரப்பில் 65% வீதம் சம்வெளிகளாகும். 35% வீதம் மலைகள் காணப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான எரிமலைகளும் வரண்ட நிலங்களும் காணப்படுகின்றன. வெள்ளியின் மிக உயர்ந்த மலை மாக்ஸ்வெல் இமய மலையை விடப் பெரிது என்பதுடன் இதன் உயரம் 11.3 Km ஆகும். வெள்ளியில் சந்திரன் மற்றும் செவ்வாயை விடக் குறைவாகவே குழிகள் காணப்படுகின்றன. மேலும் இதன் தரை மேற் பரப்பின் வயது 1 பில்லியன் வருடங்களை விடக் குறைவாகும். பூமியில் காணப்படாத அரிதான மூலகங்கள் சில வெள்ளியின் உட்பகுதியிலிருந்து எரிமலைச் செயற்பாட்டின் மூலம் அதன் தரை மேற்பரப்புக்குத் தள்ளப் பட்டு வருகின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது.

வானியல் விஞ்ஞானிகள் ரேடியோ வானியல்,செய்மதிகள், மற்றும் ரேடார் ஆகிய தொழிநுட்பங்களைப் பிரயோகித்து கடந்த 50 வருடங்களாக வெள்ளியின் தரையியல்பை ஆராய்ந்து வருகின்றனர். வெள்ளிக் கிரகமே விண்கலம் ஒன்றின் மூலம் முதன் முறையாக ஆராயப்பட்ட கிரகமாகும். நாசாவின் ஆளில்லா விண்கலமான 'மரீனர் 2' 12 மாதங்களாகக் கிட்டத்தட்ட 34 760 Km தூரம் பயணித்து வெள்ளியை அண்மித்து அதன் மேற்பரப்பு வெப்ப நிலை குறித்து ஆராய்ந்தது. அதன் பின் 1966ம் ஆண்டு இரு ரஷ்ஷிய ஆளில்லா விண்கலங்கள் வெனேரா 2 மற்றும் வெனேரா 3 என்பன வெள்ளியை அண்மித்து அது குறித்து ஆராய்ந்தன. இதையடுத்து மேலும் சில விண்கலங்கள் உதாரணமாக நாசாவின் மரீனர் 10 மற்றும் ரஷ்யாவின் வெனேரா 7,9,10 என்பன வெள்ளிக்கு அனுப்பப் பட்டன.
சமீபத்தில் வெள்ளி குறித்து ஆராய்ந்த விண்கலங்களில் நாசாவின் மகெல்லன் மற்றும் ஐரோப்பிய விண் ஆய்வுக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரெஸ் கலமும் முக்கியமானவை. வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பபட்ட மற்று அனுப்பப் படவுள்ள விண்கலங்கள் பற்றிய தகவல்களை அறிய விக்கிபீடியாவின் இத் தளத்துக்குச் சென்று நம் வாசகர்கள் பார்வையிட முடியும் - http://en.wikipedia.org/wiki/Venus?PHPSESSID=64324a5569ea1c41bac3f760f1e0bba2#Timeline

இதுவரை வெள்ளிக் கிரகத்தைப் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் உயிர் வாழ்க்கைக்கு சிறிதேனும் ஒத்துழைப்பு நல்ககக்கூடியதும், மனிதன் வருங்காலத்தில் குடியேற நினைப்பதும், இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட கிரகமாகவும் விளங்கும் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய தகவல்களைப் பார்வையிடுவோம்.
அன்புடன் ..
அண்ட்.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet


1 comment:

  1. அறிவியல் பூர்வமான விளக்கங்கள். எளிய நடை.

    ReplyDelete