WEB LINK

Wednesday, September 5, 2012

அறிவியல் வானியல்-சந்திரன்(MOON)-பதிவு-004


சூரிய குடும்பம் 2 -சந்திரன்(MOON)

நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி அண்டம் மற்றும் அதன் கரையில் அமைந்திருக்கும் சூரிய குடும்பம் பற்றிய விளக்கத்துடன் சூரியனைப் பற்றியும் மூன்று படலங்களாக வகுத்து ஆராய்ந்து இருந்தோம். சூரிய குடும்பம் 2 எனும் இத்தொடரில் வானில் சூரியனுக்கு அடுத்து ஓளி கூடிய பொருளாகத் தென்படும் பூமியின் உபகோளான சந்திரனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.


பூமியின் ஒரே ஒரு துணைக் கோளான சந்திரன் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது மிகப் பெரிய துணைக் கோளாகும். இது சூரியனில் இருந்து மிக அதிக தொலைவிலுள்ள ஒன்பதாவது கிரகமான புளூட்டோவை விட பெரியது என்பது குறிப்பிடத் தக்கது. சூரிய குடும்பத்தின் ஏனைய கிரகங்களை விட பூமிக்கு மிக அருகில் சந்திரன் உள்ளது. இதனால் தான் விண்ணில் மனிதனின் காலடி பட்ட ஒரே இடமாக சந்திரன் விளங்குகின்றது எனலாம். மேலும் விண்வெளி ஆராய்ச்சி செய்து வரும் உலகின் பல வல்லரசு நாடுகள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பல செய்மதிகளை ஏவி சந்திரனைப் பற்றி ஆராய்ந்துள்ளன. சற்று முன்னே பார்த்தால் 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பூமி மற்றும் சந்திரனை மையமாகக் கொண்ட விண்வெளிப் போட்டி தொடங்கியது.

இவ்வாண்டில் ரஷ்யா, விண்வெளியில் வலம் வந்த முதலாவது செய்மதியான ஸ்புட்னிக் ஐ அனுப்பி பூமி மற்றும் விண்வெளி பற்றிய மனிதனின் தேடலுக்கு வித்திட்டது. இதன் பின்னர் சந்திரனை நோக்கி ஆளில்லா விண்கலங்களையும் 1958ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற முதலாவது உயிரினமாக லைகா எனும் நாயையும் ரஷ்யா விண்ணுக்கு அனுப்பி விண்வெளி ஓட்டத்தில் முன்னிலை வகித்தது.

மேலும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் 1961ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதராகவும் பின்னர் 1963 இல் ரஷ்ய வீராங்கணை வலென்டினா விலாடிமிரோவ்னா டெரெஷ்கோவா விண்ணுக்குச் சென்ற முதலாவது வீராங்கணையாகவும் புகழ் பெற்றனர்.  
பதிலடியாக அமெரிக்கா ரஷ்யாவுக்கு இணையாக 1960 ஆம் ஆண்டு முதல் சந்திரனை நோக்கிய தனது ஆளில்லா விண்கலங்களை செலுத்தி வந்தது. 

இதன் பின்னர் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல் கல்லாக விளங்கும் சாதனையை அமெரிக்கா நிகழ்த்தியது. அதாவது 1969 ஆம் ஆன்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் மூவர் பயணித்த அப்பொலோ 11 விண்கலம் சந்திரனில் தரை இறங்கியதுடன் இவ்வீரர்களில் இருவர் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் எட்வின் அல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால் பதித்து நடமாடினர்.

சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 - ஆம் தேதி சனிக்கிழமை  இரவு காலமானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது 82 வயதில்   மரணமடைந்துள்ளார். இம்மாதம் தொடக்கத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
1969ம் ஆண்டு ஜூலை 20ம் திகதி சந்திரனில் தரையிறங்கிய அபொலோ 11 செய்மதியின் கமாண்டராக செயற்பட்டு சந்திரன் தரையில் முதல் காலடி எடுத்து வைத்தவர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங். 'இது ஒரு மனிதனின் மிகச்சிறிய காற்தடம். ஆனால், மனித வர்க்கத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்' என அந்த அனுபவத்தை வர்ணித்தார். உலகெங்கும் 500 மில்லியன் பேர் தொலைக்காட்சியில் அந்நிகழ்வை பார்வை யிட்டனர்.கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா வின் மிக உயரிய சிவிலியன் விருதான காங்கிரஸின் தங்க பதக்கத்தை பரிசாக வென்றார். ஆர்ம்ஸ்ட்ரோங்கும் அவரது சக விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் அல்ட்ரினும் சுமார் மூன்று மணிநேரம் சந்திரனில் நடந்து, மாதிரி உருவங்களை சேகரித்தல், சில படிவ ஆராய்ச்சிகள் செய்தல் என்பவற்றுடன் தம்மை புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

1971ம் ஆண்டு தனது இறுதி விண்வெளி பயணத்தை மேற்கொண்டிருந்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் பின்னர் நாசாவிலிருந்து விலகி விண்வெளி ஆராய்ச்சியல் பேராசிரியராக தனது பணியை தொடர்ந்தார். 1930ம் ஆண்டு பிறந்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் ஒஹியோவில் வளர்ந்தார். தனது ஆறாவது வயதில் தந்தியுடன் முதல் வான் வெளி பயணத்தை மேற்கொண்டார். 1950 ம் ஆண்டு கொரியாவுடனான யுத்தத்தின் போது அமெரிக்க கடற்படை ஜெட் வீரராக கடமை புரிந்தார். 1962ம் ஆண்டு நாசாவுடன் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து 1969 முதல் 1972 வரை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம் சந்திரனை நோக்கி 6 தடவை அப்பொலோ விண்கலங்களைச் செலுத்தி சந்திரனைத் தீவிரமாக ஆராய்ந்தது. இதன் போது மொத்தமாக 12 விண்வெளி வீரர்கள் சந்திரத் தரையில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் அவதானங்களை மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்ததுடன் விஞ்ஞான உபகரணங்களைப் பயன்படுத்தி 382 கிலோ எடையுடைய கற்கள் மற்றும் மண்ணையும் சேகரித்து வந்தனர்.

இனி சந்திரனின் இயல்புகள் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.
உபகோளின் பருமன் நிலை - சூரிய குடும்பத்தில் 5 ஆவது மிகப் பெரிய துணைக் கோள்
2.
சந்திரனின் சராசரி விட்டம் - 1737.10 Km
3.
துருவ விட்டம் - 1735.7 Km
4.
கிடை விட்டம் - 1738.14 Km
5.
மேற்பரப்பின் பரப்பளவு - (3.793 * 10 இன் வலு 7) Km2
6.
கனவளவு - (2.1958 * 10 இன் வலு 10) Km3
7.
நிறை - (7.3477 * 10 இன் வலு 22) Kg
8.
சராசரி அடர்த்தி - 3.3464 g/cm3
9.
கிடை அச்சில் மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 1.622 m/s2
10.
தப்பு வேகம் - 2.38 Km/s
11.
கிடை அச்சில் சுழற்சி வேகம் - 4.627 M/s
12.
பூமியை ஒரு தடவை சுற்றி வர எடுக்கும் நேரம் - 27.321582 நாட்கள்
13.
சராசரி சுற்றுப் பாதை வேகம் - 1.022 Km/s
14.
மேற்பரப்பு அழுத்தம் - (10 இன் -7 ஆம் அடுக்கு) Pa(பாஸ்கல்)
15.
பூமிக்கும் நிலவுக்குமான சராசரித் தூரம் - 384,403 Km

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குச் சமான சந்திர மாதம் 28 நாட்களை உள்ளடக்கியது. சந்திரனில் சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் பகுதி சாய்வாக ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் வேறுபடுவதால் அதில் கலைகள் உண்டாகின்றன். சந்திரன் பூமியைச் சுற்றி வருவதே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக முதல் 14 நாட்கள் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளரும் கலையாகவும் (வளர்பிறை) இறுதி 14 நாட்கள் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேயும் கலையாகவும் (தேய்பிறை) சந்திரன் தென்படுகின்றது.

மேலும் சந்திரனின் மேற் பரப்பை சாதாரண விண்வெளித் தொலைகாட்டி மூலம் ஒளி பெருக்கி அவதானித்தாலே அதில் பெரிய குழிகள் காணப்படுவதை அடையாளங் காணலாம். இக்குழிகளே வெறுங் கண்ணால் முழு நிலவை அவதானிக்கும் போது கறைகளாக தென்படுவன.

4.6
தொடக்கம் 3.9 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் சந்திரத் தரையில் வீழ்ந்த லட்சக் கணக்கான விண் கற்களாலேயே இக்குழிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சந்திரனில் வளி மண்டலம் இல்லாத காரணத்தாலும் பூமியை விட ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பு சக்தியே உடையதாலும் இக்குழிகள் சேதமடையாமல் இலட்சக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றன. இன்னும் சில விஞ்ஞானிகள் சந்திரன் தோன்றிய புதிதில் அதில் உயிருடன் காணப்பட்ட பல எரிமலைகளின் செயற்பாடு காரணமாக இக் குழிகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவர்களின் கூற்றுப் படி சந்திரன் தோன்றிய புதிதில் 4.45 பில்லியன் வருடங்களுக்கு முதலில் மிகப்பெரிய பரப்பளவுடைய எரிமலைக் குழம்புக் கடல் (magma) சந்திர மேற்பரப்பில் காணப்பட்டது என்பதாகும்.


சூரிய குடும்பம் தோன்றி 30-50 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் அதாவது 4.527 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் பூமியின் மேற்பரப்பில் இருந்து பிரிந்து சென்ற பகுதியே நிலவு எனக் கருதப் படுகின்றது. சூரிய குடும்பம் தோன்றிய புதிதில் ஈர்ப்பு விசை ஒழுங்குக்கு உட்படாத காரணத்தால் பூமியுடனும் ஏனைய கிரகங்களுடனும் மிக அதிகளவில் விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் மோதி வந்தன. கிட்டத்தட்ட செவ்வாய்க் கிரகத்தின் பருமனுக்கு ஒப்பான விண் பொருள் ஒன்று பூமியுடன் மோதியதால் பிளவுற்ற பாகமே சந்திரன் என்பதே பெருமளவில் வானியலாளர் களால் ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்து. மேலும் பூமியில் மிகப் பெரிய பரப்பளவுடைய தரைப் பகுதியான பசுபிக் சமுத்திரம் உருவானதற்கும் பூமியிலிருந்து பிரிந்து போன சந்திரனே காரணம் எனவும் ஒரு சாரார் நம்புகின்றனர்.

பூரண சந்திரன் ஒளிரும் போது பூமியில் tidal waves எனப்படும் கடலலைகள் மேலே எழும்பி கொந்தளிப்பாக காணப்படுவதற்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் பாலுணர்வு மேலோங்கி காணப்படுவதற்கும் மக்களின் மனநிலை பாதிப்புற்று காணப் படுவதற்கும் சந்திரனின் ஈர்ப்பு சக்தி காரணமாகின்றது என உளவியலாளர்களும் புவியியலாளர்களும் கருதுகின்றனர்.

சமீப காலத்தில் சந்திரனைக் குறித்த ஆய்வுகள் அதில் தண்ணீர் உள்ளதா உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் காணப்படுகின்றதா மேலும் அதன் பூமிக்கு புலப்படாத மறு பக்கத்தில் என்ன மர்மங்கள் உள்ளன ஆகிய ஆய்வுகள் குறித்த விரிவான ஆய்வுகள் அமெரிக்காவைத் தவிர ஐரோப்பா,சீனா,ரஷ்யா,ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளாலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இதிலும் குறிப்பாக நட்சத்திரங்களைப் பற்றி விரிவாக ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான சந்திர பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால் 2010 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் இடை நிறுத்தப் பட்டமை குறிப்பிடத் தக்கது. இதே கட்டத்தில் இன்னொரு பக்கம் சீனாவும் ஜப்பானும் இணைந்து 2015 தொடக்கம் 2035 வரையிலான காலப் பகுதியில் சந்திரனில் வீரர்கள் தங்கி திறம்பட விண்ணாய்வுகளை மேற்கொள்ள வசதியாக விண் பாசறை அமைக்க திட்டமிட்டுள்ளன என்பதும் முக்கியமான தகவலாகும்.

சந்திரன் மீது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த சுருக்கமான விபரங்களை இங்கு காண்க.(நன்றி விக்கிபீடியா)

============================

மீண்டும் சந்திப்போம் அடுத்த அறிவியல் பதிவினில் பூமியின் விளக்கங்களுடன்....

அன்புடன் .......

AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet

 

 

No comments:

Post a Comment