WEB LINK

Tuesday, September 11, 2012

தினம் ஒரு விஞ்ஞானி-கலீலியோ கலிலி(1564-1642)-பதிவு-002

பல முகங்கள் கொண்ட கலீலியோ கலீலி.
Galileo's full name was Galileo di Vincenzo Bonaiuti de' Galilei.


பல முகங்கள் கொண்ட கலீலியோ கலிலி வெள்ளிக் காசுகளை விதைத்ததுபோல் மின்னுகிறது வானம். மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணும்போதும், நிலவின் துணை யுடன் இருளில் நடை போடும் போதும், உருகிவிழும் விண்மீன் களை காணும் போதும் மனம் எவ்வளவு மகிழ்கிறது! இந்த அதிசயங்களை யெல்லாம் இன்னும் பலவித வண்ணங்களுடன், கண்களை ஈர்த்து மனதை மயக்கும் காட்சிகளாக ஒவ்வொருவரையும் காண வைத்தவர் கலீலியோ கலிலி. தொலைநோக்கியை உருவாக்கியதன் மூலம் வானத்தின் உண்மை பரிமாணத்தை காண வைத்து விஞ்ஞானத்தை புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றவர் அவர்.


இத்தாலியின் பைசா நகரத்தில் 1564 பிப்ரவரி 15-ந்தேதி கலீலியோ பிறந்தார். வான் கோள்களை முதன்முதலில் ஆராய்ந்தவர் இவர். அதை காட்சிகளாக கண்டவரும், பிறரை காணச் செய்தவரும் இவர்தான். இவர் வானில் கண்ட அதிசயங்களும், இவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங் களும் ஏராளம். பள்ளியில் படித்தபோது ஆசிரியர், அரிஸ்டாட்டில் கூற்றுப்படி பெண்களுக்கு பற்களின் எண்ணிக்கை 28 என்று கூறினார். ஆனால் கலீலியோ தனது தாயார் மற்றும் பக்கத்து வீட்டு பெண்களின் பற்களை எண்ணிவிட்டு வந்து அவர்களுக்கும் ஆண்களைப்போல 32 பற்கள் இருக்கிறது என்றார். ஆசிரியரும், மாணவர்களும் வியந்து போனார்கள்.

கவிதைகள் புனைவது, இசைப்பாடல் இயற்றுவது, ஆர்கன் வாசிப்பது, யாழ் மீட்டுவது போன்ற வற்றிலும் கலீலியோ தனித்திறமை பெற்றிருந் தார். பார்க்கும் பொருட்களை ஓவியமாகவோ, பொம்மையாகவோ வடித்து விடுவார். சிறுசிறு இயந்திரங்களையும் வடிவமைப்பார். அவருக்கு கணிதம் படிக்க ஆர்வம். ஆனால் தந்தையோ மருத்துவம் பயில சேர்த்து விட்டார். அதனால் ரகசியமாக கணிதம் கற்றார் கலீலியோ. இதனால் தந்தை, ஆசிரியர்களின் எதிர்ப்பை பெற்றார். இருந்தாலும் இயற்பியல், உயிரியல், இயந்திரவியல், வானியல் என பலதுறை அறிஞராக மிளிர்ந்தார்.

கலீலியோ, அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கூற்றுகள் பலவற்றை மறுத்தார். வெவ்வேறு எடை கொண்ட பொருட்களும் கீழே விழும் போது ஒரே நேரத்தில் விழும் என்று விளக்கினார். மருத்துவ மாணவன் கணித இயல்பியல் ஆய்வு செய்வதா என்று பேராசிரியர்களே பொறாமை கொண்டு அவர் மருத்துவத்தில் தேர்ச்சி பெறாமல் தடுத்துவிட்டனர். இருந்தாலும் சிற்றரசர் செல்வாக்குடன் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார்.


 கிறிஸ்தவ ஆலயத்தில் தொங்கிய சரவிளக்கு காற்றில் ஆடியதை அடிப்படையாக வைத்து தனிஊசலை உருவாக்கினார். இதன்மூலம் நாடித்துடிப்பும் அறியப்பட்டது. பல்கலைக்க ழக விதிப்படி சீருடை அணிய கலீலியோ மறுத்ததால் மாதம் தோறும் அபராதம் கட்டி வந்தார். ஒரு முறை மன்னரின் மகன் செய்த தூர் வாரும் எந்திரம் தவறானது என்று சொல்லியதால் கோபத்துக்கு ஆளாகி பணி வாய்ப்பை இழந்தார். வறுமையில் வாடினார். பின் பாதுவா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பணி கிடைத்தது. அங்கு அவர் ஆராய்ச்சிக்கு மதிப்பு கிடைத்தது. அவரது விரிவுரைகள் புகழ் பெற்றன. அயல்நாட்டு மாணவர்களும் அவரிடம் பயில வந்தனர். பீரங்கி குண்டின் இலக்கை கணித ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததால் ராணுவத்துறையில் செல்வாக்கு பெற்றார். இது அவருக்கு புகழ், நட்பு, வருவாய் எல்லாவற்றையும் பெருக்கித் தந்தது. 

கலீலியோவின் கண்டுபிடிப்புகளில் பெரும்புகழ் பெற்றது தொலை நோக்கி. மூக்கு கண்ணாடி தயாரித்த ஹான்ஸ் லிப்பர்ஹே என்பவர் குவி ஆடியையும், குழி ஆடியையும் சேர்த்து வைத்து பார்த்தபோது தூரத்தில் உள்ள பொருட்கள் பக்கத்தில் இருப்பது போல் தெரிந்தது. அதை கலீலியோவிடம் காட்ட, அவர் ஆராய்ச்சியை முடுக்கி விட்டு தொலை நோக்கியை உருவாக்கினார். அதன் பிறகு கலீலியோவுக்கு தொலை நோக்கிதான் தோழன். வானத்தை ஆராய்ந்து கொண்டே இருப்பார். விண்வெளி அதிசயங்களை கண்டு வியந்தார்.

பால்வீதி மண்டலத்தையும், வியாழன் கோளுக்கு 4 சந்திரன்கள் இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். பொதுமக்களுக்காக 1609 ஆகஸ்ட் 21-ல் வெனிஸ் நகர மலையில் 'கேம்னைல்' குன்றில் ஒரு தொலை நோக்கியை நிறுவினார் கலீலியோ. அதன்மூலம் மக்களும் விண்வெளி மாயாஜாலங்களை பார்த்து வியந்தனர். செல்வந்தர்கள் அந்த தொலை நோக்கியை விலைக்கு கேட்டனர். ஆனால் அவர், தனது ஆய்வுக்கு ஊக்கம் தந்த வெனிஸ் நகர தந்தைக்கு அந்த தொலைநோக்கியை அன்பளிப்பாக வழங்கினார். அதனால் அவர் பல்கலைக்கழகத்தின் நிரந்தர பேராசிரியரா கவும், 25 மடங்கு சம்பள உயர்வும் பெற்றார்.

 அவர் விண்வெளி அதிசயங்களை 3 நூல்களாக எழுதினார். அவை மிகுந்த புகழ் பெற்றன. சொந்த நகரமான பைசா நகருக்கு திரும்பி செல்ல வேண்டும் என்பது கலீலியோவின் கனவாக இருந்தது. ஆனால் அவரது விண்ணப்பத்தை பைசா நகரத்து மன்னன் ஏற்கவில்லை. மன்னனின் மகன் கலீலியோவின் மாணவன். அதனால் தந்தை இறந்தபிறகு கலீலியோவை பைசா நகருக்கு அழைத்து அரசவை கணிதஅறிஞராக சேர்த்துக் கொண்டார்.

அப்போது தன் ஆய்வில் கண்ட உண்மைகளை வெளியிட்டதால்
மதவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளானார். மதவாதிகள் தங்கள் அதிகாரத்தால் மத கருத்துக்கு எதிரான அறிவியல் கருத்துக்களைச் சொல்லக்கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர். அதனால் அவர் அறிவியல் உண்மைகளை வெளியிடவே அஞ்சினார். கலீலியோ எழுதிய நூல்கள் மதவாதிகளால் எரிக்கப்பட்டன. திரும்ப பதிப்பிக்கப்படவில்லை. ஆனாலும் அவர் ரகசியமாக ஆய்வு செய்தார். 1623 -ல் பொறுப்பேற்ற புதிய போப் கலீலியோ மீதிருந்த தடையை நீக்கினார்.

பழைய, புதிய வானியல் கருத்துக்களை ஒப்பிட்டு நூல் எழுத அனுமதித்தார். அதன்படி 2 புகழ்பெற்ற நூல்களை எழுதினார். புதிய அறிவியல் மீதான உரையாடல் (1631), உலகின் இரு முக்கிய கோட்பாடுகள்  (1632) என்ற புகழ் பெற்ற நூல்கள் அவை. இவை பூமி சூரியனை சுற்றுகிறது என்ற கோபர்நிகசின் கோட்பாட்டை விளக்குவதாக இருந்ததால் மீண்டும் சிக்கலில் மாட்டினார். அப்போது அவருக்கு வயது 70. மதவாதிகள் கலீலியோவை சுதந்திரமாக ஆய்வு செய்ய விடவில்லை. அவரை மிரட்டி பூமி சூரியனைச் சுற்றவில்லை என்று எழுதி வாங்கினார்கள். ஆய்வு செய்ய முடியாத வண்ணம் வீட்டுக் காவலில் வைத்தனர்.


ஆனால் கலீலியோ சிந்தனையின் மூலம் ஆராய்ந்து ரகசிய குறிப்புகளை நண்பர்களுக்கு அனுப்பினார். இயக்கவியல் பற்றிய அந்த ஆய்வுக் கருத்துகள் சிறந்த புத்தகமாக தயாரானது. ஆனால் நூல் வெளியான போது அதை அவரால் பார்க்க முடியாத அளவுக்கு கண்கள் இரண்டும் பார்வைத் திறனை இழந்து விட்டன. பார்வைக் குறைபாட்டுக்கு சிகிச்சை செய்ய அவரை அனுமதிக்காததால் முற்றிலுமாக பார்வையை இழந்தார். அந்த நூலை மார்பில் அணைத்தபடியே 1642 ஜனவரி 8-ம்நாள் கலீலியோ மறைந்தார்.
-------------------------------------------------

மேலும் ஒரு விஞ்ஞானியை அடுத்தப் பதிவில் காண்போம்.
அன்புடன்
 
AND .கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet
 

No comments:

Post a Comment