WEB LINK

Wednesday, September 5, 2012

அறிவியல் வானியல்-புதன்(MERCURY)-பதிவு-006

சூரிய குடும்பம் -4-புதன்(MERCURY)
நட்சத்திரப் பயணங்கள் எனும் நம் அறிவியற் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இன்றைய தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கோளான புதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். சூரிய குடும்பத்தில் புளூட்டோவை கிரகமாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் புதனே மிகச் சிறிய கோளாகும்.
புதன் சூரியனைச் சுற்றிச் மிக ஒடுக்கமான நீள் வட்டப் பாதையினூடாகச் சுற்றி வருகின்றது. பூமியைப் போலன்றி புதனுக்கு துணைக் கோள்கள் கிடையாது. எனினும் பூமியின் சந்திரனை ஒத்த இயல்புகள் புதனிலும் காணப்படுகின்றன. சந்திரனைப் போலவே புதனுக்கும் வளி மண்டலம் கிடையாது. மேலும் புதனின் தரை மேற்பரப்பில் சந்திரனைப் போலவே பெரிய குழிகள் காணப்படுகின்றன. மேலும் புதனின் உட்பகுதியில் பெருமளவு இரும்பு மூலகம் காணப்படுகின்றது.

புதன் கிரகமே சூரிய குடும்பத்தில் சூரியனை மிக வேகமாக சுற்றி வரும் கிரகமாகும். இதன் காரணமாகவே ரோமானியர்களின் வேகத்துக்குரிய கடவுளான மெர்கியூரி இன் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. சூரியனுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய புள்ளியாகக் தென்படும் புதனுக்கு ஈர்ப்பு விசை மிகக்குறைவு. இதனால் வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு இதற்கில்லை. மேலும் இது சூரியனைச் சுற்றி சுற்று வட்டப் பாதையில் 50 Km/s வேகத்தில் மிகத் துரிதமாகப் பயணித்த போதும் தன்னைத் தானே சுற்றும் வேகம் மிகக் குறைவு. இந்த வேகத்தில் இது சூரியனைச் சுற்றி வர 87.969 புவி நாட்களை எடுக்கின்றது. புதன் தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 59 புவி நாட்களை எடுக்கிறது. இது பூமியை விட 59 மடங்கு அதிகமாகும்.
 

புதன் சூரியனை இரு முறை சுற்றி வர எடுக்கும் நேரத்தில் தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது. இதனால் ஒரு பகல் பொழுது கழிய அதாவது புதனில் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு திரும்பவும் சூரியன் வர 176 புவி நாட்களை எடுக்கின்றது. இது அதன் ஒரு பகல் பொழுது அதன் ஒரு வருடத்தின் இரு மடங்காக இருப்பதற்குக் காரணமாகின்றது.

பூமியிலிருந்து நோக்கும் போது வானத்தில் புதனைக் காண்பது மிக அரிதான ஒன்றாகும். சிலவேளைகளில் நள்ளிரவு பகுதிகளில் வானத்தில் புதன் தென்படும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் இருப்பதால் அதன் பிரகாசம் புதனை மங்கச் செய்து விடுகின்றது. மேலும் மற்றைய கிரகங்களை விட ஒரு புறத்தில் (பகல்) மிக அதிக சூடும் மறு புறத்தில் (இரவு) மிக அதிக குளிரும் காணப்படும் கிரகமாகப் புதன் விளங்குகின்றது. அதாவது புதனில் சூரியனை நோக்கிய பகுதியில் வெப்பநிலை 800 பாகை பரனைட்டும் எதிர்ப்புறத்தில் -(மைனஸ்) 300 பாகை பரனைட்டும் ஆகக் காணப்படுகின்றது.

 
புதனைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இப்போது பார்ப்போம் -

1.சூரியனிலிருந்து சராசரி தூரம் - 0.387 AU
2.சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் -- 87.969 புவி நாட்கள்
3.பூமி சார்பாக சுற்றுக் காலம் - 87 நாட்கள் 23.3 மணி
4.சராசரி சுற்று வேகம் - 47.8725 Km/S
5.சாய்வு - 7.004 பாகை
6.விட்டம் - 4879.4 Km
7.மேற்பரப்பளவு - 7.5 * 10 இன் வலு 7 Km2
8.திணிவு - 3.302 * 10 இன் வலு 23 Kg
9.அடர்த்தி - 5.427 g/cm3
10.மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 2.78 M/S2
11.தன்னைத் தானே சுழல எடுக்கும் காலம் - 58 நாள் 15.5088 மணி
12.தப்பு வேகம் - 4.25 Km/s
13.பகலில் சராசரி மேற்பரப்பு வெப்ப நிலை - 623 K
14.இரவில் சராசரி மேற்பரப்பு வெப்ப நிலை - 103 K


புதனின் சூழலில் காணப்படும் மூலகங்களின் சதவீதம் -

பொட்டாசியம் - 31.7%
சோடியம் - 24.9%
ஒட்சிசன் அணு - 9.5%
ஆர்கன் - 7%
ஹீலியம் - 5.9%
ஒட்சிசன் மூலக்கூறு 5.6%
நைதரசன் - 5.2%
காபனீரொட்சைட்டு - 3.6%
நீர் - 3.4%
ஐதரசன் - 3.2%

 புதனானது மிக வளைந்த நீள் வட்டப் பாதையை உடைய கோளாகும். சூரியனுக்கு மிக அருகில் 47 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் வரையும் சூரியனுக்குச் சேய்மையில் 70 மில்லியன் கிலோ மிற்றரும் இது சுற்று வட்டப் பாதையில் வருகின்றது. மேலும் கடினமான பாறைகளுடன் கூடிய இதன் தரை மேற்பரப்பில் சூரிய குடும்பம் தோன்றிய புதிதிலிருந்து இலட்சக் கணக்கான விண் கற்களும் வால் வெள்ளிகளும் மோதி வருவதால் மிக அதிகமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய குழிகள் இதன் மேற்பரப்பில் காணப் படுகின்றன. சூரியனுக்கு மிக அண்மையில் இருப்பதால் புதனைப் பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டு வந்துள்ளது எனலாம்.

1974-1975 வருடங்களில் புதனின் மேற்பரப்பைப் படம் பிடிப்பதற்காக மாரினர் 10 எனும் செய்மதியும் சமீபத்தில் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏவப்பட்ட மெசெஞ்சர் செய்மதியும் புதனை ஆராய்ந்தன. இதில் 2009 இல் புதனை நெருங்கிய மெசெஞ்சர் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்று வட்டப் பாதைக்குள் புகுந்து அதன் செயற்கைக் கோளாய் மாறி இன்று வரை புகைப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

இது வரை புதன் கிரகம் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பம் பற்றிய பகுதியில் காதலர்களின் கிரகமான வெள்ளி பற்றிய தகவல்களை பார்ப்போம்.
 

---------------------------------------------------
மீண்டும் சந்திப்போம் அடுத்த வானியல் பதிவினில்.. வெள்ளி கிரகத்தின் தகவல்களைக் காண.....

அன்புடன் .....

AND.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet

No comments:

Post a Comment