WEB LINK

Friday, September 7, 2012

அறிவியல் வானவியல்-வியாழன்(JUPITAR)-பதிவு-009

சூரிய  குடும்பம்-7-வியாழன்-(JUPITAR)

பூமியும் வியாழனும் ஒப்பீடு

இன்றைய நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம். ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களினால் பெரும் கனவளவு நிரப்பப் பட்ட பெரு வாயுக் கோளான வியாழன் ஜோவியான் அல்லது வெளிப்புறக் கிரகங்கள் நான்கிலும் மிகப் பெரியதும் அதிக ஈர்ப்புச் சக்தி உடையதுமான கோளாகும். நாம் இதுவரை பார்த்த மிகச் சிறிய கிரகங்கள் பாறை அல்லது தரையை உடைய றொக்கி பிளானெட்ஸ் ஆகும்.

ஆனால் ஏனைய கிரகங்கள் வாயு ஜாம்பவான்கள் அல்லது மேற்பரப்பில் அதிகளவு வாயுவும் உட்கருவில் சூடான பாறையும் திரவ உலோகம் ஆகியவற்றை உடைய போதும் விண்கலங்கள் இறங்கக்கூடிய தரை மேற்பரப்பை இவை கொண்டிருக்காத தன்மை உடையன. இதனால் இவை வெளிப் புறக் கிரகங்கள் அல்லது ஜோவியான் கிரகங்கள் என அழைக்கப் படுகின்றன.

சூரியனிடமிருந்து ஐந்தாவது இடத்தில் அமைந்துள்ள வியாழன் பூமியின் விட்டத்தை விட 11 மடங்கு அதிக விட்டத்தையும் பூமியின் நிறையைப் போல் 318 மடங்கு அதிக நிறையையும் புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு அதிக ஈர்ப்பு விசையையும் உடையது. வியாழன் கிரகத்திற்குள் 1321 பூமிகளை வைக்கக் கூடிய இடம் காணப்படுகின்றது.  சூரியனிடமிருந்து சராசரியாக 484 மில்லியன் மைல் தூரத்திலும் பூமியிலிருந்து 97 மில்லியன் மைல் தூரத்திலும் அமைந்துள்ள வியாழன் தன்னைத் தானே சுற்றி வரும் வேகம் மிக அதிகமாகும். 

இது தன்னைத் தானே ஒரு முறை சுற்ற (விநாடிக்கு 8 மைல் வேகத்தில்) 9 மணி 50 நிமிடங்களை எடுக்கின்றது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 12 வருடங்களாகும். வானில் நிலா மற்றும் வெள்ளிக்கு அடுத்து வியாழனே மிகப் பிரகாசமாக சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கிரகமாகும். மேலும் சூரிய குடும்பத்தில் மிக அதிக பட்சமாக 64 துணைக் கோள்களை வியாழன் கொண்டுள்ளது. இவற்றில் கனீமிட் எனும் துணைக் கோள் புதன் கிரகத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வியாழனின் துணைக் கோள்களும் பூமியும் அதன் நிலவும்: வியாழனில் மிக அதிகளவில் வாயுக்களின் புயல் வீசி வருகின்றது. இதன் விளைவாகவே இங்கு மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம்(Great Red Spot) உருவாகியுள்ளது. பூமியைவிட மிகப் பெரிய கனவளவுடைய இப்பிரதேசத்தில் 17ம் நூற்றாண்டில் தொடங்கிய மாபெரும் புயல் வீசி வருகின்றது.

மேலும் ஏனைய ஜோவியான் கிரகங்களைப் போலவே (சனி,யுரேனஸ்) வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதியும் வலிமையான காந்தப் புலமும் உள்ளது. வியாழனின் அதி கூடிய ஈர்ப்பு விசை காரணமாக விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் தூசுதுகள்கள், வால் வெள்ளிகள், மற்றும் விண் கற்கள் என்பன ஈர்க்கப்பட்டு அதன் துணைக் கோளாக மாறக் கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன. மேலும் புவிக்கருகில் வியாழன் இருப்பதால் பூமியைத் தாக்க வரும் விண் பொருட்களும் இக்கோளாள் ஈர்க்கப்பட்டு விடும் சந்தர்ப்பங்களும் பல நிகழ்ந்துள்ளன.

வானியல் அறிஞர் கலிலியோ: மிகச் சிறந்த வானியலாளரும் தொலைக் காட்டியைக் கண்டு பிடித்தவருமான கலிலியோ தனது தொலைக்காட்டியின் மூலம் 1610 ஆம் ஆண்டு வியாழனின் 4 பெரிய நிலவுகளைக் கன்டு பிடித்தார். அவை யுரோப்பா,கனிமீட்,லோ மற்றும் கல்லிஸ்டோ என்பவையாகும். வியாழன் மிகப் பெரிய கிரகமாகத் திகழ்வதால் அதற்கு ரோமானியர்கள் தமது கடவுள்களின் அரசனும் வானத்தின் தேவனுமான ஜுபிடர் எனும் பெயரைச் சூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோமன் கடவுள்களின் அரசன் ஜுபிட்டர்:
வியாழன் ரோபோட்டிக் விண்கலத்தாலும் நாசாவின் பயனீயர் மற்றும் வொயாஜெர் செய்மதிகளாலும் கலிலீயோ ஆர்பிட்டர் எனும் விண்கலத்தாலும் விரிவாக ஆராயப்பட்ட கிரகமாகும். மேலும் 2007 பெப்ரவரியில் வியாழனின் சுற்றுப்பாதை வழியாக புளூட்டோ கிரகத்தை ஆராயச் சென்ற நியூ ஹாரிஸன் எனும் விண் கலத்தால் சமீபத்தில் வியாழன் படம் பிடிக்கப்பட்டது. இவ்விண்கலம் வியாழனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி தனது வேகத்தை அதிகரித்துக் கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழனின் துணைக் கோளான இயுரோப்பா பனிக் கட்டி மூலக்கூறுகளாலான சமுத்திரத்தை உடையது எனும் காரணத்தால் அது வானியலாளர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இனி வியாழன் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.
தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 9 மணி 55 நிமிடம் 30 செக்கன்
2.
சூரியனை ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 11.8618 ஆண்டுகள்
3.
தனது அச்சில் சாய்வு - 1.305 பாகை
4.
சுற்றுப் பாதையில் சராசரி வேகம் - 13.07 Km/s
5.
சராசரி ஆரை - 69 911 +or- 6 km
6.
மேற்பரப்பளவு - 6.1419 * (10 இன் வலு 10) km2 - 121.9 மடங்கு பூமியின்
7.
கனவளவு - 1.4313 * (10 இன் வலு 15) Km3 - 1321.3 மடங்கு பூமியின்
8.
நிறை - 1.8986 * (10 இன் வலு 27) Kg - 317.8 மடங்கு பூமியின்
9.
சராசரி அடர்த்தி - 1.326 g/cm3
10.
மையத்திலிருந்து ஈர்ப்பு - 24.79 m/s2 or 2.528 g
11.
தப்பு வேகம் - 59.5 Km/s
12.
மேற்பரப்பு வெப்பம் - குறை - 0.1 K, நடு - 0.165 K, மிகை - 0.112 K
13.
மேற்பரப்பு அமுக்கம் - 20 - 200 kPa

வளி மண்டலத்தில் வாயுக்களின் வீதம் -

1.
ஐதரசன் - 89.8%
2.
ஹீலியம் - 10.2%
3.
மெதேன் - 0.3%
4.
அமோனியா - 0.026%
5.
நீர் - 0.0004%

வியாழனின் துணைக் கிரகமான யுரோப்பாவில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அங்கு 10 Km அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 Km ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி அறியத் தந்தார்.

மேலும் 1994ம் ஆண்டு வெயில் காலத்தில் வானில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வாகப் பதியப் பட்டது என்னவென்றால் சூமேக்கர் லெவி 9 எனும் மிகப் பெரிய வால்வெள்ளி வியாழனுக்கு அண்மையில் வந்து அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப் பட்டு பல துண்டுகளாகச் சிதறி அதனுடன் மோதியது. இத்துண்டுகள் விஞ்ஞானி களால் முத்துக்களின் சிதறல் எனும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டன. இம் மோதுகை யினால் வியாழனில் மிகச்சிறிய நடுக்கங்கள் ஏற்பட்டதை வானிய லாளர்கள் அவதானித்துள்ளனர். மேலும் இம்மோதுகை காரணமாக ஏற்பட்ட கரும் பொட்டுக்கள் வியாழனில் பல மாதங்களுக்குத் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை வியாழன் குறித்த சுருக்கமான விபரங்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பத்திலேயே அடர்த்தி மிகக் குறைந்த கிரகமாகவும் இரண்டாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்கும் சனிக் கிரகத்தைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
====================================
மீண்டும் சந்திப்போம்... சனிக் கிரகப் பதிவினில்...
 
அன்புடன்...

அண்ட்.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet 

அறிவியல் வானியல்-செவ்வாய்(MARS)-பதிவு-008

சூரிய குடும்பம் -6- செவ்வாய் (MARS)


செவ்வாய்க் கிரகம் 

நட்சதிரப் பயணங்கள் வானியல் தொடரில் இன்று செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

 

 

 சொடுக்குங்கள் - 

செவ்வாய்க் கிரக விண்வெளிப் பயணத்திற்கு.

தரையின் சிவப்பு நிறம் காரணமாக ரெட் ப்ளானெட் என அழைக்கப்படும் செவ்வாய், ரோமானியர்களின் யுத்தத்துக்கு உரிய கடவுளான மார்ஸ் எனும் பெயரை சூடியுள்ளது. சூரிய குடும்பத்தில் சூரியனிடமிருந்து 4வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக இது காணப்படுகின்றது. செவ்வாய், போபோஸ் மற்றும் டெயிமோஸ் எனும் இரு துணைக் கோள்களைக் கொண்டுள்ளது.
 

துணைக்கோள்கள் டெயிமோஸ்,போபோஸ் : 

பூமியைப் போலவே துருவப் பகுதிகளைக் கொண்டுள்ள செவ்வாயில் சந்திரன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களில் காணப்படுவது போலவே பெரிய குழிகளும் மேலும் மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள் மற்றும் பாலை வனங்கள் என்பனவும் காணப்படுகின்றன. சூரிய குடும்பத் திலேயே மிகப் பெரிய மலைத் தொடரான ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவநிலை வட்டம் நிகழ்கின்றது. மிகவும் மெல்லிய வளி மண்டலத்தை உடைய செவ்வாயில் கார்பனீரொட்சைடு வாயுவே அதிகம் உள்ளது.
  ஓலிம்பஸ் மலை

தரைப்பகுதி சிவப்பாகக் காணப்படுவதற்குக் காரணம் அதில் மேற்பரப்பில் உள்ள துரு அல்லது இரும்பு ஒக்ஸைட்டு ஆகும். துருவப்பகுதிகளில் உள்ள பனி பெரும்பாலும் கார்பனீரொட்சைட்டின் உலர்ந்த வடிவமாகும்.  

செவ்வாய்க் கிரகமே அதிகளவு விண்கலங்கள், தொலைக்காட்டிகள் மற்றும் செய்ம்மதிகள் மூலம் ஆராயப்பட்ட கிரகமாகும். 1965ம் ஆண்டு நாசாவால் செலுத்தப்பட்ட மரீனெர் 4 செவ்வாயின் மேற்பரப்பில் நீர் உள்ளதா என ஆய்ந்தது. இதையடுத்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் செவ்வாயில் ஒரு காலத்தில் மிக அதிகளவு நீரும் பூமியில் உள்ளது போலவே கடலும் காணப்பட்டதற்கான சாத்தியக் கூறுகள் கிடைத்தன.
பூமியும் செவ்வாயும் . 

சமீபத்தில் 2007ம் ஆண்டு மார்ச்சில் ஏவப்பட்ட நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் செவ்வாயின் மார்ட்டியன் நிலம் எனும் ஆழம் குறைந்த தரையில் 2008 ஜூலை 31 இல் இறங்கி பனித் துகள்கள் குறித்து ஆராய்ந்தது. தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் மூன்று விண்கலங்கள் இயங்குகின்றன. அவை மார்ஸ் ஒடிஸ்ஸி, மார்ஸ் எக்ஸ்பிரெஸ், மற்றும் மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் என்பனவாகும்.

மேலும் நாசாவின் இரு இரட்டை வண்டிகளான ஸ்பிரிட் மற்றும் ரோவர் என்பன செவ்வாயின் தரையில் இறங்கி அதன் மேற்பரப்பின் இயல்புகளை ஆராய்ந்தன. இவை ஆரம்பத்தில் ஒழுங்காக இயங்கிய போதும் சில மாதங்கள் கழித்து இவற்றுடன் தொடர்புகளை மேற் கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து நாசாவால் செலுத்தப்பட்ட மார்ஸ் குளோபல் செர்வெயோர் எனும் செய்மதி செவ்வாயின் தென் துருவத்தை ஆராய்ந்து அங்கு பனிப் பாறைகள் விலகுவதைக் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கிரகம் இத்தனை தீவிரமாக விஞ்ஞானிகளால் ஆராயப்படுவதற்குக் காரணம் அங்கு உறை நிலையிலோ வாயு நிலையிலோ நீர் காணப்படுமிடத்து வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்பதாகும்.
ஸ்பிரிட் விண்வண்டி
ரோவர் விண்வண்டி.
இனி செவ்வாய்க்கிரகம் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள அதிக பட்ச தூரம் - 249 209 300 Km அல்லது 1.665 861 AU
2.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள குறுகிய தூரம் - 206 669 000 Km அல்லது 1.381 497 AU
3.தனது அச்சில் சரிவு - 25.19 பாகை
4.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 24.6229 புவி மணித்தியாலங்கள்
5.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் - 686.98 நாட்கள்
6.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் - 24.1309 Km/s
7.கோளின் விட்டம் மையக் கோட்டினூடாக - 6794.4 Km
8.மேற்பரப்பளவு - 144 மில்லியன் Km2
9.திணிவு - 6.4191 * 10 இன் வலு 23 Kg
10.சராசரி அடர்த்தி - 3.94 g/cm3
11.மேற்பரப்பு ஈர்ப்பு சக்தி - 3.71 m/s2
12.தப்பு வேகம் - 5.02 Km/s
13. மேற்பரப்பு வெப்பநிலை - குறுகியது 133K மத்திய 210K அதிக 293K


செவ்வாயின் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதங்கள் -


1.காபனீரொட்சைட்டு - 95.32%
2..நைதரசன் - 2.7%
3.ஆர்கன் - 1.6%
4.ஒக்ஸிஜன் - 0.13%
5.நீராவி - 0.03%
6.ஓசோன் - மிகக் குறுகியளவு


வெறும் கண்களால் பார்க்கும் போது சந்திரனுக்கு அண்மையில் பிரகாசமான நட்சத்திரம் போல் தென்படும் செவ்வாய் தொலைக் காட்டிகளாலும் தெளிவாக அவதானிக்கத் தக்கது. அமெரிக்காவின் மரீனர் 4 செய்மதியைப் போலவே முந்தைய சோவியத் ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் செவ்வாய் குறித்து ஆராய்வதற்கு ஆர்வம் காட்டின.
 

செவ்வாயின் தோற்றம் பற்றி நோக்கும் போது விஞ்ஞானிகள் கருதுவது என்ன வென்றால் சூரிய குடும்பம் தோன்றும் போது இத்தொகுதியில் காணப்படும் தூசு துகள்களுடன் விண்கற்கள் மோதியதால் செவ்வாய் உருவானதாகவும் பின்னர் சூரியனால் ஈர்க்கப்பட்டு அதைச் சுற்றி வர நேரிட்டதாகவும் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகளவு எரிமலைகள் தொழிற்பட்டு வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு நிரம்பியதாகவும் கூறப்படுகின்றது. செவ்வாயின் தரைப் பகுதி மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டு நோக்கப் படுகின்றது.
 
அவையாவன :
1.தெற்கு உயர் நிலம்
2.வடக்கு சமநிலம்
3.துருவப் பகுதிகள்


தெற்கு உயர் நிலம் மிகப்பெரியதாகும். இங்கு சந்திரனில் காணப்படுவது போன்று குழிகள் காணப்படுகின்றன. 3.9 மில்லியன் வயதுடைய இம் மலைப்பகுதி மிகப் பழையதாகும் வடக்கு சமநிலம் மிகத் தாழ்ந்த பகுதியாகும். மிகப்பழைய காலத்தில் இங்கு பூமியில் உள்ளதைப் போலவே கடல்கள், அருவிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் என்பவற்றுடன் எரிமலைகளும் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. துருவப் பகுதிகளை எடுத்து நோக்கினால் நாம் சாதாரண தொலைக் காட்டிகள் மூலம் அவதானிக்கும் போதுகூட தெளிவாகத் தென்படுவன வாகும். நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் இந்த துருவப் பகுதியிலேயே (தென் துருவம்) இறங்கி பனிக்கட்டி களைக் குடைந்து நீர் மூலக்கூறுகளைத் தேடியமை குறிப்பிடத்தக்கது. 

செவ்வாயின் மையத்திலிருந்து சராசரியான ஆரை 1500 - 2000 Km இடையில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதி பெரும்பாலும் இரும்பு கலவையினாலும் சல்ஃபர் மற்றும் சிலவேளைகளில் ஒக்ஸிஜனாலும் ஆக்கப்பட்டுள்ளது. பூமியைப் போலவே இதன் மையத்தில் அமைந்துள்ள திரவமான மன்டெல் சிலிக்கேட்டால் ஆனதாகும். இதன் அடர்த்தி 1300 - 1800 Km இடைப்பட்டதாகும். சூரியனுக்கு அண்மையிலுள்ள ஏனைய கிரகங்களைப் போலன்று செவ்வாயின் வளி மண்டலம் அடர்த்தி குறைவாகக் காணப்படுவதால் அதனால் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. எனினும் எரிமலைகளின் தொழிற்பாடு காரணமாகவும் தரையின் இயல்பினாலும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை பூமியை விட அதிகம். இதனால் திரவநிலையில் அங்கு நீர் இருப்பதற் கான சாத்தியங்கள் குறைவு.

இதன் மேற்பரப்பில் அடிக்கடி நிகழும் மணற் புயல் காரணமாக இதன் தரை வேறுபாடுகளை உயர்ரக விண் தொலைக் காட்டிகளால் கூட தெளிவாக அவதானிக்க முடியாத தன்மை நிலவுகின்றது. இதுவரை செவ்வாய்க் கிரகம் பற்றிய பௌதிக மற்றும் விண்ணியல் தகவல்களைப் பார்த்தோம்.

எதிர்வரும் தொடரில் தரையில்லாத அடர்ந்த வாயுக்கோள்களில் முதலாவதாகவும் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமாகவும் விளங்கும் வியாழன் குறித்த தகவல்களை ஆராய்வோம்.

-------------------------------
அன்புடன் ..
அண்ட்.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet

அறிவியல் வானியல்-வெள்ளி(VEENUS)-பதிவு-007




  சூரியனை கடக்கும் வெள்ளிகிரகம்
105 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் பேரனுக்கோ, பேத்திக்கோ,அல்லது கொள்ளுபேரர்களுக்கோ மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு ஜுன் 6ந் தேதி  உங்களுக்கு கிடைத்தது, வெள்ளி இடைமறிப்பு என்னும் நிகழ்வு:

நீங்கள் தினசரி வானத்தை பார்க்கீர்களா? என்றால் இல்லை என்ற பதில்தான் அதிகமாக வரும். தினசரி வானத்தை பார்க்க வானத்தில் என்னதான் இருக்கிறது?. காலை அற்புதமான சூரிய உதயத்தில் துவங்கி மாலை சூரிய அஸ்தமனம் என வானம் காட்டும் வர்ண ஜாலங்கள், இரவுநேர வானத்தில் வைரத்தை கொட்டிவைத்தது போன்ற கண் சிமிட்டும் நட்சதிரங்கள், நம் சூரியன் உள்ளடங்கிய பால்வெளி மண்டலம், நிலவின் மாறிவரும் தோற்றம், அடிவானத்தில் தெரியும் வெள்ளி கிரகம், அவ்வப்போது பூமிக்கு அருகில் வந்து செல்லும் வியாழன், சனி, செவ்வாய் கிரகங்கள், என சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி அற்புதம் காட்டும் வானத்தில் வரும் ஜூன் 6 வெள்ளி கிரகம் சூரியனை கடந்து செல்கிற இடைநகர்வு நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு குறித்து மதுரை கலிலியோ அறிவியல் மையத்தின் அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர் சத்தியமாணிக்கம் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக அளித்த பிரத்யோக நேர்காணல் இது.
கலிலியோ செயல்பாட்டாளர் சத்தியமாணிக்கம் .
ஜூன்- 6ல் நிகழவிருக்கும் வானியல் அற்புதம் குறித்து சொல்லுங்களேன் !!!

ஜீன் - 6ஆம் நாள் காலை நமது தமிழகத்தில் 5.22.மணி முதல் காலை10.22வரை வானில் நமது சூரியனைக் கடந்து வெள்ளிக் கோள் நகர்ந்து செல்வதை நாம் பார்க்க முடியும். இது அபூர்வ நிகழ்வு நமது திரைப்படங்களில் சூரிய உதயத்தின்போது சூரியனை கடந்து பறவைகள் செல்வதைப்போல காட்டுவர்களே அதைப் போல , பூமியின் சம அளவு உள்ள வெள்ளிக்கோள் மிக தொலைவில் இருப்பதால் நமக்கு ஒரு சிட்டுக் குருவியைப் போல தெரியும் அல்லவா, அந்த அளவில் சூரியனில் வெள்ளிக் கோள் கடந்து செல்வதை பார்க்கலாம் , அது மட்டுமல்ல சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்கு தெரியும் அதையும் அன்றைய தினம் பார்க்க முடியும். நாம் வாழும் காலத்தில் வானில் நடக்கும் இநத் அற்புதத்தை கண்டு மகிழ்வோம்.


கோள்களின் இடைநகர்வு என்றால் என்ன?
நமது சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் நாம் மூன்றாம் இடத்தில் உள்ளோம். சூரியனின் பக்கத்தில் முதலில் இருப்பது புதன், அடுத்து வெள்ளி , நமக்கு துணைக் கோள் சந்திரன். இந்த கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றி வருகின்றது என்பதை அறிவோம். அப்படி வரும் போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் போது சூரியனை சந்திரன் மறைக்கும் இதை சூரிய கிரகணம் என்கின்றோம். 

இதே போல சந்திரனுக்கும் , சூரியனுக்கும் இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் வந்தால் அதை சந்திர கிரகணம் என்கின்றோம், இந்த கோள்களின் பயணத்தால் மற்ற வான் பொருள்களை இடை மறிப்பு செய்வதை கோள்களின் இடை நகர்வு என்கின்றோம், ஏற்கனவே நாம் முதலில் கூறியதைப் போல நாம் மூன்றாம் கோள் . நமக்கு உட்கோள்களாக உள்ள புதன், வெள்ளி, சந்திரன் கோள்கனிள் இடைநகர்வை மட்டுமே நம்மால் காண முடியும். இது கோள்கள் நடத்தும் நிழல் விளையாட்டு என்று கூடச் சொல்லலாம்.
 
வெள்ளி கிரகத்தின் இடைநகர்வு இதற்கு முன்னால் எப்போது நடந்துள்ளது. இனி நடக்குமா?


முதல் முதலாக வெள்ளி இடை நகர்வை 1631ஆம் ஆண்டுதான் கண்டறிந்துள்ளார்கள் அதன் பிறகு 1639,1761,1769,1874,1882,2004 என ஏழு முறை நடந்துள்ளது, இனி 2012 ஜீன் 6ம் நாள் காண முடியும், அடுத்து நாம் வெள்ளி இடை நகர்வை 2117ஆம் ஆண்டுதான் காண முடியும் அதற்கு 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது வாழும் மனிதர்களில் பலருக்கும் சாத்தியமில்லை.

வெள்ளி இடைநகர்வு நிகழும் நேரம்.

வெள்வி இடைநகர்வை வெறும் கண்களால் பார்க்கலாமா? 

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்.ஆனால் சூரிய கிரகணத்தையோ , வெள்ளி இடை நகர்வையோ நாம்வெறும் கண்ணால் பார்க்க கூடாது. அதிக வெப்பக் கதிர்கள் கிரகணத்தின் போது நம்மை நோக்கி வருவதால் நமது கண்கள் உடனடியாக பாதிக்கக் கூடும். எனவே பாதுகாப்பாக பார்க்க எளிமையான வழிகள் உண்டு. நாம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளியை ஒரு திரையில் அடிக்கச் செய்து அதில் இந்த வெள்ளி நகர்வை பார்க்கலாம். தொலை நோக்கி இருந்தால் அதன் மூலம் பிம்பத்தைப் பிடித்து பார்க்கலாம், ஊசித் துளைக் கேமராவை உருவாக்கி பார்க்கலாம், பாதுகாப்பான சூரிய வடிகட்டிக் கண்ணாடிகளை வாங்கிப் பார்க்கலாம், வெல்டிங் கண்ணாடி எண் 14லைப் பயன்படுத்தலாம். இந்த முறைகளைத் தவிர வேறு வழிகளில் நாம் வெள்ளி நகர்வை பார்க்கக்கூடாது. அது நல்லதல்ல.
-------------------------------------------------------
சூரிய குடும்பம் -5- (வெள்ளி -Veenus)



இதுவரை சூரிய குடும்பத்தில் சூரியன்,பூமியின் துணைக்கோள் சந்திரன் மற்றும் தரை மேற்பரப்பை உடைய கிரகங்களான பூமி, புதன் ஆகிய அங்கத்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தொடரில் வானில் சந்திரனுக்கு அடுத்து பிரகாசமாக அதிகாலை மற்றும் அந்தி மாலை ஆகிய இருவேளைகளிலும் ஒரு நட்சத்திரம்போல் தென்படும் வீனஸ் எனப்படும் வெள்ளியைப் பற்றி பார்ப்போம். பொதுப்படையாக வீனஸ் என்பது ரோமானியர்களின் அன்பு,காதல் மற்றும் அழகுக்கான பெண்தெய்வத்தின் பெயராகும்.

 -
ஹபிள் தொலைக் காட்டியால் படம் பிடிக்கப் பட்டுள்ள வெள்ளியின் ஒரு பகுதி

வெள்ளிக் கிரகத்தின் இன்னொரு பெயரான சுக்கிரன் என்பது இந்து சமயத்தில் நவக்கிரகங்களில் அதிர்ஷ்டத்துக்கு அதிபதியாகவும் அசுர குருவாகவும் விளங்கும் கோள் அல்லது தேவராகும். இன்னொரு விதத்தில் வெள்ளியில் காணப்படும் வரண்ட பள்ளத்தாக்குகளாலும் பல உயிருள்ள எரிமலைகளாலும் அது நரகம் அல்லது அசுரர்களின் நிலம் என ஒரு சாராரால் அழைக்கப்படுகின்றது.

வெள்ளி பருமனிலும் இன்னும் சில அம்சங்களிலும் பூமிக்கு சராசரியாக சமனாக இருப்பதால் பூமியின் தங்கைக் கிரகம் என அழைக்கப்படுகின்றது. சூரியனிலிருந்து புதனுக்கு அடுத்து 2வது இடத்தில் இது அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தின் பெரும்பாலான கிரகங்களைப் போலன்றி வெள்ளி வலமிருந்து இடமாகவே எதிர்ப் பக்கமாக தனது அச்சில் சுழலுகின்றது. வெள்ளிக் கிரகமே தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வந்து செல்லும் கிரகமாகும். இது சூரியனிடமிருந்து சராசரியாக 108 200 000 Km தூரத்தில் சுற்றி வருகிறது.


வெள்ளி தனது அச்சில் மிக மெதுவாக சுற்றி வரும் கிரகமாகும். இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 224.7 புவி நாட்களையும் தனது அச்சில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர 243 நாட்களையும் எடுக்கிறது. வெள்ளியின் எடை பூமியின் எடையின் 4/5 பங்காகும். அதன் ஈர்ப்பு விசை புவியை விட சிறிது குறைவு. பூமியில் 100 பவுண்ட் எடையுடைய ஒரு பொருள் வெள்ளியில் 91 பவுண்டுகளாகும். மேலும் வெள்ளியின் அடர்த்தியும் புவியை விட சிறிதே குறைவாகும். வெள்ளியின் வளி மண்டலத்தின் தன்மை காரணமாக அது சூரிய குடும்பத்தில் வேறு எந்த கிரகத்தையும் விட மிக அதிக வெப்பமுள்ள கிரகமாக விளங்குகின்றது. வெள்ளியின் மேற்பரப்பு வளி மண்டல அடுக்கின் வெப்ப நிலை 55 F(13 C) ஆகவும் தரை மேற்பரப்பின் வெப்பநிலை 870 F(465 C) ஆகவும் காணப்படுகின்றது. இக்கிரகத்தின் அதீத வெப்பநிலை காரணமாக இக்கிரகத்தின் உள்ளே தண்ணீர் காணப்படின் அது முழுதும் ஆவியாகி விடும் சூழ்நிலையே நிலவுகின்றது. இதன் காரணமாக பூமியில் காணப்படும் உயிரினங்கள் இங்கே வாழ முடியாது. எனினும் வேறு ஏதும் உயிர்கள் இங்கு காணப்படுகிறதா என விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை. 
இனி வெள்ளி பற்றிய சுருக்கமான இயல்புகளைப் பார்ப்போம்.

1.
சூரியனிலிருந்து சராசரித் தூரம் - 0.72333199 AU
2.
சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 224.701 நாட்கள்
3.
தன்னைத் தானே தனதச்சில் ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 243.0187 நாட்கள்
4.
பூமி சார்பாக சுற்றுக் காலம் - 583.92 நாட்கள்
5.
சராசரி சுற்று வேகம் - 35.0214 Km/s
6.
துணைக் கோள் - இல்லை
7.
மையத்தினூடாக விட்டம் - 12103.6 Km
8.
மேற்பரப்பளவு - (4.60 * 10 இன் வலு 8) Km2
9.
திணிவு - (4.869 * 10 இன் வலு 24) Kg
10.
சராசரி அடர்த்தி - 5.24 g/cm3
11.
மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 8.87 m/s2
12
அச்சின் சாய்வு - 2.64 பாகை
13.
தப்பு வேகம் - 10.36 Km/s
14.
மேற்பரப்பு வெப்ப நிலை - தாழ்வு 228K இடை 737 K உயர் 773 K
15.
வளியமுக்கம் -
9321.9 Kpa

வெள்ளியின் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களின் வீதங்கள் -  

1.
கார்பனீரொட்சைட்டு - 96%
2.
நைட்ரஜன் - 3%
3.
சல்பர் ஒக்ஸைட் - 0.015%
4.
நீராவி - 0.002%
5.
ஹீலியம் - 0.0012%
6.
நியோன் -
0.0007%

வெள்ளிக் கிரகத்தின் வயது புவியின் வயதுக்கு அண்ணளவிற் சமனாகும். இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்திலேயே சூரியனிடமிருந்து தோன்றின என்றும் ஒரு சிலரால் கருதப்படுகின்றது. வெள்ளியின் வளி மண்டலத்தைப் பார்த்தால் மிக அதிகளவாக காபனீரொட்சைட்டு (96%) காணப்படுகின்றது. இதனால் சூரிய குடும்பத்திலேயே மிகப் பாரமான வளி மண்டலத்தையுடைய கிரகமாக வெள்ளி விளங்குகின்றது. பூமியைப் போலவே வெள்ளியிலும் பச்சை வீட்டு விளைவு எனும் தாக்கம் நிகழ்கின்றது. ஆனால் இத்தாக்கம் தாவரங்களில் அல்லாது வளி மண்டலத்தில் நிகழ்கிறது. அதாவது காபனீரொட்சைட்டும், சல்பூரிக் அசிட்டும் இணைந்து சூரிய ஒளியை சிறைப் பிடிப்பதுடன் அதை வெளியேறாமலும் செய்து விடுகின்றன. இதனாலேயே வெள்ளியின் சுற்றாடல் மிக வெப்பமாகக் காணப்படுகின்றது.

மேலும் வெள்ளியின் வளியமுக்கமும் பூமியை விட 90 மடங்கு அதிகம் (9321 Kpa) என்பதுடன் வெள்ளியின் பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கிலிருந்து மேற்காக 362 Km/h வேகத்தில் தொடர்ச்சியாகக் காற்று வீசி வருகின்றது.

வெள்ளியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியைப் போலவே வெள்ளியிலும் மலைகள், மைதானங்கள், பள்ளத்தாக்குகள், மற்றும் சமவெளிகள் என்பன காணப்படுகின்றன. தரை மேற்பரப்பில் 65% வீதம் சம்வெளிகளாகும். 35% வீதம் மலைகள் காணப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான எரிமலைகளும் வரண்ட நிலங்களும் காணப்படுகின்றன. வெள்ளியின் மிக உயர்ந்த மலை மாக்ஸ்வெல் இமய மலையை விடப் பெரிது என்பதுடன் இதன் உயரம் 11.3 Km ஆகும். வெள்ளியில் சந்திரன் மற்றும் செவ்வாயை விடக் குறைவாகவே குழிகள் காணப்படுகின்றன. மேலும் இதன் தரை மேற் பரப்பின் வயது 1 பில்லியன் வருடங்களை விடக் குறைவாகும். பூமியில் காணப்படாத அரிதான மூலகங்கள் சில வெள்ளியின் உட்பகுதியிலிருந்து எரிமலைச் செயற்பாட்டின் மூலம் அதன் தரை மேற்பரப்புக்குத் தள்ளப் பட்டு வருகின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது.

வானியல் விஞ்ஞானிகள் ரேடியோ வானியல்,செய்மதிகள், மற்றும் ரேடார் ஆகிய தொழிநுட்பங்களைப் பிரயோகித்து கடந்த 50 வருடங்களாக வெள்ளியின் தரையியல்பை ஆராய்ந்து வருகின்றனர். வெள்ளிக் கிரகமே விண்கலம் ஒன்றின் மூலம் முதன் முறையாக ஆராயப்பட்ட கிரகமாகும். நாசாவின் ஆளில்லா விண்கலமான 'மரீனர் 2' 12 மாதங்களாகக் கிட்டத்தட்ட 34 760 Km தூரம் பயணித்து வெள்ளியை அண்மித்து அதன் மேற்பரப்பு வெப்ப நிலை குறித்து ஆராய்ந்தது. அதன் பின் 1966ம் ஆண்டு இரு ரஷ்ஷிய ஆளில்லா விண்கலங்கள் வெனேரா 2 மற்றும் வெனேரா 3 என்பன வெள்ளியை அண்மித்து அது குறித்து ஆராய்ந்தன. இதையடுத்து மேலும் சில விண்கலங்கள் உதாரணமாக நாசாவின் மரீனர் 10 மற்றும் ரஷ்யாவின் வெனேரா 7,9,10 என்பன வெள்ளிக்கு அனுப்பப் பட்டன.
சமீபத்தில் வெள்ளி குறித்து ஆராய்ந்த விண்கலங்களில் நாசாவின் மகெல்லன் மற்றும் ஐரோப்பிய விண் ஆய்வுக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரெஸ் கலமும் முக்கியமானவை. வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பபட்ட மற்று அனுப்பப் படவுள்ள விண்கலங்கள் பற்றிய தகவல்களை அறிய விக்கிபீடியாவின் இத் தளத்துக்குச் சென்று நம் வாசகர்கள் பார்வையிட முடியும் - http://en.wikipedia.org/wiki/Venus?PHPSESSID=64324a5569ea1c41bac3f760f1e0bba2#Timeline

இதுவரை வெள்ளிக் கிரகத்தைப் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் உயிர் வாழ்க்கைக்கு சிறிதேனும் ஒத்துழைப்பு நல்ககக்கூடியதும், மனிதன் வருங்காலத்தில் குடியேற நினைப்பதும், இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட கிரகமாகவும் விளங்கும் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய தகவல்களைப் பார்வையிடுவோம்.
அன்புடன் ..
அண்ட்.கிருஷ்ணமூர்த்தி / tnsfchromepet


Wednesday, September 5, 2012

அறிவியல் வானியல்-புதன்(MERCURY)-பதிவு-006

சூரிய குடும்பம் -4-புதன்(MERCURY)
நட்சத்திரப் பயணங்கள் எனும் நம் அறிவியற் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இன்றைய தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கோளான புதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். சூரிய குடும்பத்தில் புளூட்டோவை கிரகமாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் புதனே மிகச் சிறிய கோளாகும்.

அறிவியல் வானியல்-பூமி(EARTH)-பதிவு-005



சூரிய குடும்பம் - 3 - பூமி(EARTH)
சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது.

அறிவியல் வானியல்-சந்திரன்(MOON)-பதிவு-004


சூரிய குடும்பம் 2 -சந்திரன்(MOON)

நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி அண்டம் மற்றும் அதன் கரையில் அமைந்திருக்கும் சூரிய குடும்பம் பற்றிய விளக்கத்துடன் சூரியனைப் பற்றியும் மூன்று படலங்களாக வகுத்து ஆராய்ந்து இருந்தோம். சூரிய குடும்பம் 2 எனும் இத்தொடரில் வானில் சூரியனுக்கு அடுத்து ஓளி கூடிய பொருளாகத் தென்படும் பூமியின் உபகோளான சந்திரனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

அறிவியல் வானியல்-சூரியன்(SUN)-பதிவு-003


சூரியன் தகவல்களை பார்ப்போமே
சூரிய குடும்பத்தில் சூரியனுடன் ஒன்பது கிரகங்கல் காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பெரியதும் நடுநாயகமானதும் சூரியனே ஆகும்.

SPEED MATHEMATICS !!! கணிதத்தில் வேகமா ? பதிவு - 7

SPEED  MATHEMATICS!!! கணிதத்தில் வேகமா???
ஆம் கணிதத்தில் வேகம் கூட்டுமோமே !!!

introductionGenerally, students expect an easier method to solve a problem. The idea is that the faster you solve an arithmetic or mathematics problem there will be a less chance of making a mistake. The capability and intelligence of a student or an engineer is understood by the way he does multiplication, division  or squaring a number etc. Things done in less time are highly valued.

கணக்கும் இனிக்கும் !!! பதிவு 6


இனிக்குமா கணக்கு ???
கணக்கும் இனிக்கும் !!!!
NUMBER : 4913 
 
CUBE ROOT OF  4913 IS 17..
17 X 17 X 17 = 4913

BUT THE SUM OF THE DIGITS IN THE NUMBER IS ALSO  = 17 
 4 + 9 +1 + 3 = 17

Tuesday, September 4, 2012

கணக்கும் இனிக்கும் !!! பதிவு 5


இனிக்குமா கணக்கு ???   கணக்கும் இனிக்கும் !!!! 
PECULIAR NUMBER 25 20

25 20 IS A PECULIAR NUMBER. WHY??? 
IT IS DIVISIBLE BY ANY NUMBER FROM 1 TO 9.

Sunday, September 2, 2012

அறிந்து கொள்வோமே அறிவியலை - பதிவு-002

தேசீய குழந்தைகள் அறிவியல் மாநாடு! 
NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS!
இந்திய அறிவியல் மாநாடு! INDIAN SCIENCE CONGRESS!

அறிந்து கொள்வோமே அறிவியலை - பதிவு -001

ரோவர் விண்வண்டி
அறிந்து கொள்வோமே !! அறிவியலை.!!! செவ்வாய் கிரகத்தில் நாமும் நடை பயிற்சி செய்வோமே !!

Saturday, September 1, 2012

தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அழைப்பிதழ் -சுற்றறிக்கை

தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அழைப்பிதழ் -சுற்றறிக்கை

அன்புள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குரோம்பேட்டைக் கிளை அங்கத்தினர்களுக்கு,