விண்வெளியில் சந்திரா
Wednesday, October 19: இன்றைய தினம் காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பிறந்த தினம். 1910 ஆண்டு அக்டோப்ர் 19 ந் தேதி பிறந்த அவரது நூற்றாண்டு விழா கடந்த ஆண்டில் கொண்டாடப்பட்டது. அவர் காலமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்று அவரது பெயரைத் தாங்கிய செயற்கைக்கோள் - சந்திரா - அவரைப் போலவே அயராது உழைத்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நாஸா (NASA) விண்வெளி அமைப்பு விண்வெளியில் எக்ஸ் கதிர்களை வெளியிடும் நட்சத்திரங்களை ஆராய விரும்பியது. காமா கதிர், எக்ஸ் கதிர் ஆகியவற்றைப் பூமியைப் போர்த்துள்ள காற்று மண்டலம் தடுத்து விடுவதால் அவற்றை வழக்கமான டெலஸ்கோப் மூலம் தரையிலிருந்தபடி ஆராய முடியாது. ஆகவே இக்கதிர்களை ஆராய காற்று மண்டலத்துக்கு மேலாக அமைந்தபடி பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள் ஒன்றை மேலே அனுப்ப முடிவு செய்யப்பட்டது.இந்த செயற்கைக்கோளுக்கு ஏதாவது ஒரு பெயர் வைக்க நாஸா விரும்பியது. உலகில் யார் வேண்டுமானாலும் தகுந்த்தொரு பெயரைக் கூறலாம் என்று நாஸா அறிவித்தது. பல ஆயிரம் பேர் இதில் பங்கு கொண்டு பெயர்களைக் கூறினர். அவர்களில் பெரும்பாலோர் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரை வைக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவரது பெயரைச் சுருக்கி அந்த செயற்கைகோளுக்கு சந்திரா எக்ஸ்ரே ஆய்வுக்கூடம் என்று பெயர் வைத்தனர்.
எக்ஸ் கதிர்களை சாதாரண முறையில் படம் பிடிக்க இயலாது என்பதால் விசேஷ கருவிகள் உருவாக்கப்பட்டு செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டன.சந்திரா செயற்கைக்கோள் 1999 ஆம் ஆண்டு கொலம்பியா ஷட்டில்(Columbia Shuttle) மூலம் உயரே செலுத்தப்பட்டது. ’சந்திரா’ 5 ஆண்டுகள் செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
பூமியை இந்த செயற்கைக்கோள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே ஒரு சமயம் அது பூமியிலிருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. வேறு சமயம் 16 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதுவரை சந்திரா செயற்கைக்கோள் எண்ணற்ற அரிய தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது.
சந்திரா டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய ஒரு படம் |
விஞ்ஞானி சந்திரசேகர் நட்சத்திரங்களின் பரிமாண வளர்ச்சி தொட்ர்பாக 1930 ஆம் ஆண்டு வாக்கில் தமது இளம் வயதில் கண்டுபிடித்துக் கூறிய ஒரு கொள்கை விஞ்ஞான உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அதை ஏற்க முன்வரவில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னது தான் சரி என்பது நிரூபண மாகியது. அது சந்திரசேகர் வரம்பு ( Chandrasehkar Limit) என்று குறிப்பிடப்படுகிறது. இக் கண்டுபிடிப்புக் காக சந்திரசேகருக்கு 1983 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சந்திரசேகர் 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறி கடைசி வரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
====================================
பதிவர் திரு.என்.ராமதுரை அவர்களுக்கு மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு.மேலதிக தகவல்களுக்கு காண்க: http://www.ariviyal.in/search/label/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?max-results=2 அன்புடன் கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment